Tuesday, July 8, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(6)

கம்பனில், கவியரசர் திளைத்து ரசித்த பகுதிகள்
பலவற்றையும் பார்த்து வரும்வேளையில், விதி பற்றிய
பாடல் ஒன்றை அவர் பெரிதும் ரசித்திருப்பதைக்
காணமுடிகிறது.

பாடல் இடம் பெற்ற படம் : தியாகம்பாடல் வரிகள் :

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றமின்றிவேற யாரம்மா!

சிறப்பான இந்த வரிகளுக்குப் பிறப்பெடுத்துக் கொடுத்தவை
கம்பனின் காவிய வரிகளே!
முடிசூட்டல் இராமனுக்கே எனமுடிமன்னன் தயரதன் முடிவுசெய்கிறான்.செய்தி கேட்டு வெகுண்டெழுகிறாள், மனமுடைகிறாள்'தீயவை யாவினும் சிறந்த
தீயாளா'கிய கூனி.கைகேயி அரண்மனையை
அடைகிறாள்.அஞ்சுகம் எனப் பஞ்சணையில்
படுத்துறங்கும்அவளை உலுக்கி எழுப்புகிறாள்.
அவளைச் சீண்டுகிறாள்வரம் ஒன்றினால்
இராமன் காடேகவும் மற்றதனால்பரதன்
நாடாளவும் மன்னனிடம் கேட்குமாறு தூண்டுகிறாள்.
இருவருக்கும் இடையேவாதம், விவாதம் தூள் பறக்கின்றன!

இறுதியில் -
திண்ணிய நெஞ்சினளாகிய கூனிமந்தரை வந்த
வேலையைஎண்ணிய காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாள்.
தேவி தூய சிந்தையும் திரிகிறது.முடிசூட்டல் இல்லை இராமனுக்கு எனக்கேட்ட இளவல் இலக்குவன் காலத் தீ எனக் கொதிக்கிறான்.
"சிங்கக் கு;டிக்கு ஊட்ட இருந்த தீஞ்சுவை ஊனை நாயின்வெங்கண் குட்டிக்கு ஊட்ட நினைத்தனளே கைகேயி!என்னே அவள் அறிவின் திறம்" என்று சீறிவானுக்கும் பூமிக்குமாய்க் குதிக்கிறான் :
சொன்ன சொல்லை மாற்றிவிட்டமன்னவனைத் தந்தையாக எண்ண அவன் மனம் ஒப்பவில்லை!
"சூட்டுவேன் இராமனுக்கே முடி நான் யாரெனக்காட்டுவேன். இதற்குத் தடையாக அந்தமூவருமே வந்தாலும் சரி தேவருமே வந்தாலும் சரியாவரையும் அழித்தொழிப்பேன். இதனைத்தடுப்பவர்கள் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்"தம்பியின் தனி ஆவேசக் குரல் கேட்டுநம்பியும் ஓடோடி வருகிறான்.
"இதுவரை எவரையும் சொல்லால் சுடாத தம்பியேஇது என்ன புதுக் கோலம்,ஏனிந்தக் கோபம்?" இனிய சொல்லெடுத்து இராமன் கேட்க"வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்குஇலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"இலக்குவன்.(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்டநீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)
இந்தப் பாடலைக் கம்பன் அமைத்திருக்கும்ஓசை நயத்தோடு படித்துப்பாருங்கள்.
கூற்றம் எனக் கொதிக்கும் இலக்குவனின் சீற்றமும்விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் குதிக்கும் அவன் தோற்றமும்கண்முன்னே தெளிவாகத் தெரியும்!
அவன் கோப மன நிலை புரியும்.அவனை இராமன் அமைதிப் படுத்துகிறான்.இலக்குவனின் கோபத் தொனிக்கு மாறாகஇராமனின் குரலொலிக்கிறது :"நதியின் பிழையன்று நறும்புன லின்மையற்றேபதியின் பிழையன்று பயந்துநமைப் புரந்தாள்மதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்தவிதியின் பிழைநீயிதற் கென்கொல் வெகுண்டதென்றான.;"இந்தப் பாடலையம் இந்தச் சந்தத்தோடு படித்தால்இராமனின் சாந்தத்துக்கு ஏற்பக் கம்பன் சந்தம் அமைப்பதை உணரலாம்.
(கம்பனின் பாடல்களில் எல்லாம் அந்த அந்தச் சூழ்நிலை, பாத்திரங்களின்தன்மைக்கு ஏற்பவே சந்தங்கள் அமைந்திருக்கும்.எனவே கம்பனின் கவிதைகளை ரசிக்க விரும்வோர்அவற்றை வாய்விட்டு உரிய சந்தத்தோடு படித்தல் வேண்டும்.அப்போது தான் கம்பனை முழுமையாக உணர முடியம் ரசிக்கவும் முடியும்!).
கவியரசர் இப்படித்தான் கம்பனை ரசித்திருப்பார்.அதனால் தான் இந்தப் பாடல் வரிகளையும் கருத்துகளையும்தன் திரைப் பாடலில் பக்குவமாய் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.கண்ணதாசன் பாடல்களுக்குவிரிவுரையோ விளக்க உரையோபதவுரையோ பொழிப்புரையோ தேவை இல்லை!
மாறாகக் கம்பன் பாடல்களைப் படிப்பதற்கும்பொருள் உணர்ந்துகொள்வதற்கும் பயிற்சி தேவை!
அதனால்தான் இக்கட்டுரைகளில்கம்பன் கவிதைகளுக்குச்சுருக்கமான விளக்கம் தேவை ஆயிற்று.இனி,கம்பன் பாடியதாகக்கண்ணதாசன் உட்படப் பலரும் தவறாகஎண்ணிக்கொண்டிருக்கும் பாடல் வரி ஒன்றைச் சொல்லிஅதனைக் கண்ணதாசன் பயன்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டிஅது போலவேகம்பன் காட்டாத காட்சி ஒன்றைக்கம்பன் காட்டி இருப்பதாகக் கருதிக்கண்ணதாசன் எழுதிய வரிகளைக் கூறிஇந்தக் கட்டுரைக்கு மங்களம் பாடிவிடலாம்.அது நாள் வரைஅதுதான் நாளை வரைகொஞ்சம் பொறுத்திருங்களேன்.பிரான்சிலிருந்து அன்பன்பெஞ்சமின்.

Monday, July 7, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(5)




சென்ற முறை,
வியட்நாம் வீடு
என்ற படத்தில்



வரும் 'பாலக்காட்டு பக்கத்திலே
ஒரு அப்பாவி ராஜா...'

என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தேன்.
அதில் வரும் 4வரிகளையும் சொல்லி அவை கம்பன்
பாடலின் அடியொற்றி எழுதப்பட்டவை, கம்பனின்
அவ்வரிகளை யாரேனும் சுட்டிக்காட்ட முன்
வாருங்கள் என அழைப்பும் விடுத்திருந்தேன்.
இது வரை எவரும் அதற்கு விடை தரவில்லை.

அதனால் பாதகம்இல்லை, தவறும் இல்லை!
ஏனெனில், கம்பனை ஆழமாகப் படித்தவர்களும்
அறியாத,அறிந்தும் பொருட்படுத்தாத பாடல் இது!.
இனி நம் தொடரைத் தொடர்வோம்.

"சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்"எனப்
பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல்
சிற்றிலக்கியங்கள் ஈறாகத்தமிழ் இலக்கியங்களை
ஊன்றிப் படித்திருக்கவேண்டும். தம் திரைப்படப்
பாடல்களில் இவர் இவற்றை இழைத்திருக்கும்
பாங்குகளைப் பலரும் இணையதளத்தில்பதிவு
செய்திருக்கின்றனர்.(காண்க : நிலாச்சாரலில்

கண்ணதாசன் பற்றிய சக்திதாசன் கட்டுரைகள்,
திண்ணையில் அப்துல் கையூம் கட்டுரை, -

நிலா முற்றத்தில். சத்தியாவின்கட்டுரை...).எனவே,
திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே.

எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது!
அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு
உண்டு.
கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு
இல்லை அவர். கம்பனில்கருத்தூன்றிப் படித்திருக்க
வேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில்
படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா?

பார்த்து ரசித்திருப்பாரா?இல்லை அதனைத் தன்
பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான்
செய்திருப்பாரா?
அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன்
வரிகளைவைக்கிறேன் உங்கள்
பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

கம்பனின் காவிய வரிகள் இதோ :
"பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து
இருந்த பெண்ணை ஆகத்தில் ஒருவன் வைத்தான்
அந்தணன் நாவில் வைத்தான்மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளைமாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்த்தி!"

சூர்ப்பணகை - மூக்கறுபட்டவள்ஆர்ப்பரித்து அழுத
வண்ணம்அண்ணன் இராவணனிடம் ஓடோடி
வருகிறாள். தன்அவல நிலைக்குக் காரணத்தைத்
தருகிறாள்.அதே சமயம், சீதையின் அழகை எல்லாம்
சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள்அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள்.
அப்போதே அவர் அவரவரை அவரவர் இடத்தில் வைக்க
வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.'பரமசிவன்
பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான்.
தாமரை மலரில் இருந்த திருமகளைத்தன் மார்பிலே வைத்திருக்கிறான். பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்.

தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன்தன் நாவிலேயே வைத்திருக்கிறான்.மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை
இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயேவைத்து வாழ்கிறார்கள்.மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க்கீர்த்தி பெற்ற அண்ணனேமின்னலை விட நுண்ணிய இடை கொண்ட
செம்பொன் சிலையாம் சீதையைஅடையும் போது
அவளைஎங்கே வைத்து வாழ்வாய் நீ!'எனச்
சூர்ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.
ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்
பெறுகிறது.கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு
'எங்கனம் வைத்து வாழ்தி!' என்ற வரியில்
கீழறைப்பொருளை வைக்கிறான் :மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம்உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் !
இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை
எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்?வாழமாட்டான்!

இறுதியில் வீழ்வான் என்றபொருள் இவ்வரியில்
பொதிந்துள்ளது.கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள்
கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து
தோய்ந்தவர்கள்பார்வையிலும் படாத பாடல் இது!
ரசிகமணி டி.கே.சியோ,திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோபேராசிரியர் அ. ச. ஞானசபந்தமோ
கூட எங்கேயும் எடுத்துக் காட்டாத கவிதை இது!

எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ!
எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ!

அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார்
கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக்காட்சிக்கு ஏற்பச்
சொற்களை அமைத்து' ராஜாபத்மநாபன் ராணியைத்
தன் நெஞ்சில் வைத்தான்."
என்றுமுத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!
கம்பனின் வைரமணி வரிகள் பலகவிஞர் கண்ணதாசனின்
நெஞ்சைக் கவர்ந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றிக் கவிஞரே

'நான் ரசித்த வர்ணனைகள்" என்றதம் நூலில் குறிப்பிடுகிறார்.
அவர் ரசித்த அந்தப் பாடல் -பலரும் ரசித்த பாடல்!கம்பனின்
தலைசிறந்த பாடல் வரிசையில் இடம் பெற்ற பாடல்.

எந்த அளவுக்கு இந்தப் பாடல் கவிஞரின் நெஞ்சைக் கவர்ந்தது என்றால்,அப்பாடல் வரி ஒன்றைஅப்படியே தன் பாடலில் பதிந்து வைத்துவிட்டார் கவிஞர்.

அந்த வரியைப் பார்க்குமுன் கம்பனின் கவிதை
வரிகளைக் கண்டுபடித்து ரசித்து வருவோம் , கண்ணதாசன்
ரசித்ததைப் போல.என்னையே நோக்கி யான் இந்
நெடும்பகை கொண்டது எனத்தன்னையே தருக்கி நின்ற
இராவணன்,'வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த
தோளும்நாரத முனிவற்கு நயம்பட உரைத்த நாவும்தாரணி
மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்வீரமும் களத்தே
போட்டு வெறுங் கையொடு மீண்டு''சானகி நகுவள் என்றே
நாணத்தால் சாம்பிய' இராவணன் மண்ணின் மீது மாண்டு
கிடக்கிறான் - மனைவிமண்டோதரி ஓடோடி வந்து
அவனைக்கண்டு புலம்பி அழுகிறாள்.

பெற்ற மகன் இந்திரசித்துவின் தலைஅற்ற உடலைக்
கண்டழுது ஒப்பாரி வைக்கும் போதுகொற்றவன்
இராவணனுக்கும் நாளை இந்தக் கதிதானே என
ஒப்பிலாத் தன் கணவனை நினைத்து அப்போதே
ஒப்பாரி வைத்து அழுதவள் அவள்.அதனைக் கம்பன்"
அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்ற அமுதால்
செய்தநஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை
இத்தகையன் அன்றோ!" எனஅவள் அரற்றுவதாகப்
பாடுவான்.

மகன் மரணத்திலேயே மணாளனின் மரணத்தைக்கண்டு
உருகிப் பாடிய மண்டோதரிகணவனின் உடலைப்
பார்க்கிறாள்கண்ணீரும் கம்பலையுமாகத் தன் உள்ளத்து
உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்தத்
திருமேனிஎள்ளிருக்க இடமின்றி உயிரிருக்கும்
இடம் நாடி கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
னச் சிறையில் கரந்த காதல் ; உள்ளிருக்கும் எனக்
கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!

இராம பாணம் இராவணன் உடலைச்சல்லடைக் கண்களாய் துளைத்திருக்கிறதாம்!(இக்காலத்து AK 47 துப்பாக்கி போல).
ஏன்? ஏன்? ஏன்?காரணத்தைத் தேடும் மண்டோதரியன்
மனம்பெண்மைக்கே உரிய (feminine logic)தோரணையோடு பேசுகிறது :அமுதால் செய்த நஞ்சாம் சீதை மேல் வைத்த
முறையற்ற அறமற்ற காதல் எங்கே இருக்கிறதுஎனத்
தேடிக் கண்டுபிடித்து அதனை வேரோடுகல்லி எறியவே
இராவணன் உடலைப் பாணம்சல்லியாகத்
துளைத்துவிட்டிருக்கிறது.

துளைக்கப் பட்ட உடல் எப்படிப் பட்ட உடல்?
இளைத்துப் போன உடலா அது? றைவன் இருக்கும் இமயத்தையேபெயர்த்தெடுக்க முயன்ற உடல் அல்லவா!
அதனாலேயே சாதாரண அவன் மேனிதிருமேனி
ஆன உடல் அல்லவா?
(திருமேனி என உடலை அழைப்பது வைணவ மரபு,
இராவணன் சிவபக்தன், ஆகவே அவன்உடலைத்
திருமேனி என வைணவ மரபுப்படி அழைப்பது
தவறாகும். ஆனால் கம்பன்அப்படித்தான் அழைக்கிறான்
மண்டோதரி வாயிலாக!
கைலாய மலையை அவன் தீண்டியகாரணத்தால்
அவன் மேனி திருமேனி ஆனது என்ற கருத்துப்படத்தான்
கம்பன்அப்படிக் கூறி இருக்கிறான்).சிவனைக்
குறிப்பிட எத்தனையோ வர்ணனைகள் குறியீடுகள்
உண்டு.
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு
' வெள்ளெருக்கஞ் சடைமுடியான்" எனக் கம்பன்
குறிப்பிடுகிறானே, ஏன்?
யாருமே விரும்பாதவற்றைத் தான் விரும்பி
ஏற்பவன்சிவன் - அமுதைப் பிறர்க்கு அளித்துவிட்டு நஞ்சைத் தானருந்தியதிருநீலகண்டன் அல்லவா அவன்.
பட்டையும் பீதாமபரத்தையும் பிறர்க்குத்தந்துவிட்டுத்
தான் மட்டும் மான் தோலையும் யானைத்
தோலையும்புலித்தோலையும் உடுத்துகின்றவன்
தானே அவன். அது போலவே, வண்ண மலர்களை,
வாசப் பூக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு
யாரும் சூட விரும்பாஎருக்கம் பூவைத் தான்
சூடிக்கொண்டவன். இப் பூவில் கண்ணைக்
கவரும் வண்ணமோகருத்தைக் கவரும்
கள்ளோ (தேன்) இல்லை! பிறரைக் கவரும்
ஆற்றலும் இந்தப்பூச்சூடிய சடைக்கும் இல்லை!
அதனால்தான் போலும் இராவணன் அங்கே
தன் வீரத்தைவலிமையைக் காட்டி மேரு மலையைத்
தோளில் எடுக்க முனைந்தான். இப்போதுஇவற்றுக்கு
நேர் மாறான முரண்தொடையை அமைக்கிறான் கம்பன்.
கள்ளோடு கூடியஅழகிய வண்ண மலர்களைச்
சீதையின் கூந்தலுக்குச் சூட்டுகிறான்,
"கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்' என்று. மயக்கம் தருவது
கள். அந்தக் கள்உள்ள மலர்களைச் சூடிய சீதை மீது
மாளாத மயக்கம் கொண்டான் இராவணன்.
அழகுதருவது கூந்தல்.
அதனால் அழகெனும் அழகுமோர் அழகு பெற்ற
சீதை மேல், கள்ளொடுகூடிய பூச்சூடிய கூந்தலை
உடைய சானகி மீது அடங்காக் காதல் கொண்டான்
இராவணன். இவ்வளவு கருத்தழகுகளைப்
பொதிந்துள்ள இந்தக் கவிதை கண்ணதாசன்
மனத்தைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பிலலை.
அதிலும் ' கள்ளிருக்கும்மலர்க் கூந்தல் சானகி' என்ற
வரி கண்ணதாசனைப் பெரிதும் ஈர்த்துவிட்டது.
பல திரைப் பாடல்களில்;, கம்பன் கருத்தை உள்
வாங்கித் தன் வயமாக்கி தன்சொற்களில் வழங்கிய
கண்ணதாசன் இந்த வரியை மட்டும் அப்படியே தன்
பாடலில்பொதிந்து வைத்துவிடுகிறார், தங்க
அணிகலனில் வைரமணியைப் பதிப்பது போல :
"கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்கள்ளிருக்கும்
மலர்க் கூந்தல் சானகி".எந்தப் படத்தில், என்ன இடத்தில்
இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல்என்ன...
பாடியவர் யார்... போன்ற விவரங்களை அறிந்தோர்
கூறினால் பெரிதும்மகிழ்வேன்.
இனி,கம்பன் சொற்களையும் கருத்துகளையும்
கலந்து கண்ணதாசன் எழுதிய பாடல்ஒன்றைக்
காண்போமா...

Sunday, June 29, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் - (பகுதி 4)

ம்பன் காட்டும் கன்னிகண்ணுள் நுழைந்த
கள்வனைக் கண்ணால் சிறைசெய்துநெஞ்சச்
சிறையில் அடைத்துவிட்டதோடு நிற்கவில்லை
அந்தப்பஞ்சவண்ணக் கிளி!தன்னையும்
அவனையும் பள்ளி அறையில் கொண்டு
போய்ச்சேர்க்கும்படித் தோழியை வேண்டுகிறாள்.

கண்ணதாசனின் கன்னியோகண்மூடிக் காத்திருப்பேன்
எனக் காத்திருக்கிறாள்.அவனுக்காகவே அவள்
பூத்திருக்கிறாள்.

கம்பனின் உலாவியற் படலத்தில்இது போலப்
பல பாடல்கள்இலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக்
இட்டுச்செல்லும்இனிய ஆடல்கள்!

பருவப் பெண்கள்இராமனின் அழகு நலன்களை
எல்லாம்பகுதிபகுதியாகப் பாhத்துப் பார்த்துப்
பருகுகிறார்கள்!திருமேனி அழகைத் தீண்ட
முடியாமல் உருகுகிறார்கள்!
உதித்த சூரியனாய் உலா வரும் அவன்
மேனியில்பதித்த இடத்திலிருந்து பார்வையை
மீட்க முடியவில்லையாம்!வாள்கண் நங்கையர்
தம் கண்கள்ஆடவர்கள் மேல் முதலில் பாயும்
இடம்தோள்களாம்! பல இடங்களில்கம்பன் சொல்கிறான்.
(ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்'என்று
கம்பன் கூறுவதைக் கவனத்தில கொள்க!)

பாதையோடு செல்லும் முனிவனின் பின்னால்
இராமன் செல்கிறான்அவன் மேல்சீதை
பார்வையைப் பதிக்கிறாள் தன்நெஞ்சைப்
பறிகொடுக்கிறாள்.அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்!கண்ணொடு கண் இணைகிறது.

நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது.உயிரோடு
உயிர் பிணைகிறது!

அச்சமயம், சீதையின்நோக்கிய நோக்கெனும்
நுதிகொள் வேல் இணைஆக்கிய மதுகையான்
தோளில் ஆழ்ந்தன.

இது போன்ற இன்னொரு காட்சியைக்
கம்பன்உலாவியற் படலத்தில் காட்டுகிறான் :

உலவி வரும் நிலவு என வீதியில்உலவி வரும்
இராமனின் அழகுநலன்களைக் காணும்சில
பெண்களின் கண்கள்அவன் தோளில் ஆழ்கின்றன.

சிலபெண்களின் கண்கள்அவன் தாளில் வீ;ழ்கின்றன.
"தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்னதாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!

"கம்பனைத் தவிர வேறெந்தக்கொம்பனும் வரைய
முடியாதகாவிய வரிகள்!

மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள்
மலைத்துப் போகும்!நிலைகுலைந்த
நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்!
இராமனின் தோள்சேரும் பேறு சீதைக்கு
மட்டுமே என்றாலும்வாராதோ தங்களுக்கும்
அப்பேறு என்ற ஏக்கம்!விளைவு?

பதிந்த இடத்தை விட்டுநகர மறுக்கும் விழிகள் - உள்ள(த்)தைப்
பகர முடியாத மொழிகள்!புவனமே புரண்டெழுந்து
வந்தாலும் அவர்கள்கவனம் என்னவோ அவனின்
தோள் மீதுதான்!

வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் :
கல்லையும் பெண்ணாய்க் கனியவைத்தனவாமே
காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போதுதங்களையும்
அப்படிச் செய்யுமா,தங்கள் வாழ்வும் விமோசனம்
பெற்று உய்யுமா?பாவப்பட்ட பெண்கள் அங்கே
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடுதாள் கண்டார் தாளே கண்டார்!

தோளையும் தாளையும் தனித்தனியாய்நோக்குறும்
கன்னியர் பற்றிய வரிகள்கண்ணதாசனின் கருத்தைக்
கவர்ந்துவிடுகின்றன!

என்ன அற்புத வரி இது :
“தோள் கண்டார் தோளே கண்டார்”!
ஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது!
இப்படியான அற்புத வரியைஎப்படியாவது
பயன்படுத்த விழைகிறது!படித்துச் சுவைத்து
லயித்து ரசித்த சொற்களைஅப்படியே இழைத்து
வைக்கநல்லதொரு வாய்ப்பும் வருகிறது!
திரைப் படம் : இதய கமலம்

“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்வாள் கண்டேன் வாளே கண்டேன்வட்டமிடும் விழிகள் கண்டேன்”
தாளை வாளாக்கிக் கம்பனின்வார்த்தைகளைத்
தன் பாடலில்வார்த்தெடுக்கும் வித்தை
கண்ணதாசனுக்குக்கைவந்த கலை இல்லை,
இல்லை…கவிதை தந்த கலை!

எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்றவண்ணம்
பலப்பல வண்ணக் கவிதைகளைவாரி வழங்கிய
வள்ளல் கம்பன்.கைவண்ணம் கால்வண்ணம்
என்று அவன் சொன்னவண்ணம் கண்டு கேட்டு
ரசித்தகண்ணதாசனும் அவ்வண்ணமே பல
வண்ணங்களைப் போட்டுப்பாடலாக்கி நாம்
மகிழும்வண்ணம் தந்த திறமையை என்னவென்பது!

அந்தப் பாடலைப் பாhக்கும் முன் கம்பன்முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா?

விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்கவிசுவரூபம்
எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி இறைக்கடை
துடித்த புருவமும் எயிறு என்னும்பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி!

இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்!இறுதியில்,
இராமன் தன்சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்
விடுகிறான்.அறந்திறம்பிய அரக்கியின் மார்பைத்
துளைத்துப்புறம் போகிறது அந்த இராம பாணம் -
கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல!
கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில்காட்டிய
ரம் கண்டு மகிழ்ச்சி கொண்டுபெரிய முனிவனும்
அரிய படைக்கலன்களை வழங்கினான்.

பின்னர், முனிவன் முன் செல்லஅண்ணலும் அவன்
தம்பியும்பின் சென்றனர் - மிதிலை நோக்கி!
வழியில் -மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது
இராமனின் பாதம் அதனைக் கடந்ததுகண்ட கல்
மிசை காகுத்தன் கழல் துகள் கதுவஅற்புதம் ஒன்று நிகழ்ந்தது.பெண்ணமுதாய் அது மாறி நின்றது!

அன்னையே அனையாட்கு நிகழ்ந்ததுஎன்னை என
இராமன் கேட்கிறான்.கவுதம முனிவனின்
கைப்பிடித்தவளைஅகலிகை எனும் பெயர்
படைத்தவளைவிழியால் காதல் கதை பேசி
நவ்வி போல்விழியாளை வீழ்த்திய இந்திரன்
கதையைமுனிவன் கூறக்கேட்டான்."நெஞ்சினால்
பிழைப்பு இலாள்' எனநீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான.;

தாடகை வதத்தில் இராமன் தடக்கையின்
உரங்கண்டுமேடைக் கல் மாதவளாய் மாறியதில்
அவன் காலின் திறங்கண்டு;விசுவாமித்திரன்
டுகின்றான்வியப்பின் எல்லையில் நின்று"மைவண்ணத்
தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலேகைவண்ணம்
அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்று!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய
அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன்
பாடல் ஒன்றில் முழுக்க முழுக்கவண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார்தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்!

பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப்
பறந்த பாடல் அது.படம் : பாசம்இதோ, கவியரசரின்
கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :பால் வண்ணம் பருவம் கண்டுவேல் வண்ணம்
விழிகள் கண்டுமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :கண் வண்ணம் அங்கே கண்டேன்கைவண்ணம் இங்கே கண்டேன்பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல்தேர் வண்ண மேனி தொட்டுபூவண்ண
பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ?இல்லை,
இல்லை கவிதை வண்ணம்?
இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள்
அமைத்துள்ளார் கவிஞர்.ஆனால் அவை கம்பன்
அடியொற்றிப் பிறந்தவை அல்ல.அதனால் அவை
இங்கே இடம் பெறவில்லை.காட்டாக,கல்லைத்தான்
மண்ணைத்தான் காய்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தனா என்றுபாடிய இராமச்சந்திரக்
கவிராயர் பாடலைப் போல அமைந்ததுதான்,
பாவமன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம்
நெஞ்சில் நிலைத்து நின்று விட்டபாடல் :

"அத்தான், என்னத்தான் அவன் என்னைத்தான் எப்படி சொல்வேனடி..".
'பலே பாண்டியா" என்ற படத்தில் வரும்,

'அத்திக்காய் அத்திக்காய்ஆலங்காய் வெண்ணலவே..' பாடல்
எழுதக் கவிஞருக் 'கை' கொடுத்தது தனிப்பாடல்திரட்டில் வரும் "உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ..."
என்றவெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில் வேண்டு
மென்றே கொண்டுவரவில்லை.வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும்.

இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட
கம்பனின் பாடல்களைப் பலரும்அறிந்திருக்கக்
கூடும். அல்லது கேள்வியாவதுபட்டிருக்கலாம்.
னி, கவிஞர்எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும்
குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்குஅடித்தளம்
அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்!

வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.'பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடல்தான் அது.
அதில்இடம் பெறும் பரமசிவன் சக்தியை ஓர் பாதியில்
வைத்தான் அந்தபரமகுரு ரெண்டு பக்கம் தேவியை
வைத்தான்பால் கடலில் மாதவனே பக்கத்தில்
வைத்தான் - ராஜாபத்மநாபன் ராணியைத் தன்
நெஞ்சில் வைத்தான்.

என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது!

எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?...தேடுங்கள், கண்டடைவீர்கள்.கண்டவர்கள் விண்டிடலாம.; விண்டவர்கள் கண்டிருக்கவேண்டும்.

கண்டு பி(ப)டிக்க இரண்டு நாள்கள் போதுமா?
அதுவரைஎனக்கு ஓய்வுபிறகு தொடரும்
இந்த ஆய்வு!
அன்பன்,


பிரான்சிலிருந்துபெஞ்சமின்

Friday, June 27, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன்(பகுதி 3)

இதோ,கண்ணதாசன் ரசித்த கம்பன் -
கம்பீரமாய் வருகிறான்.
உண்ணத் தெவிட்டாக் கனியமுதாய்த்
தமிழமுதைத் தருகிறான்!
எங்கிருந்து தொடங்க?
கம்பன் கவிதைகள் - கட்டிக் கரும்புகள்!தொட்ட
இடமெல்லாம் சுவைப்பவைகடித்த இடமெல்லாம் -
இல்லை, இல்லைபடித்த இடமமெல்லாம் இனிப்பவை!
எங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கெனாதபடி சுவை பயப்பவை!

என் சிறப்புரையில் சொல்லாத -அண்மையில்
எழுத்துக்கூடத்தில் வெளி வந்தநன்றி :சத்தியா -
நிலா முற்றம்.என்ற கட்டுரையில் இடம் பெற்ற
" காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்னும்பாடலில்
இருந்தே தொடங்கலாமா?
திருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்தவழ்ந்து
வரும் தென்றலாய்க்காற்றினிலே வரும்; இந்தக்
கீதத்தில்கடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும்
இதன் ஆசிரியர்,
" அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்)இலக்கியச்
சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச்சென்று விடுகிறார்.

"கண் திறந்து நானிருந்தேன்கட்டழகர் குடி புகுந்தார்கண்
திறந்தால் போய் விடுவார்கண் மூடிக் காத்திருப்பேன்"....
என எழுதுகிறார்.

உண்மைதான்-கண்ணதாசனின் இந்த இலக்கியச்
சிறப்பின் உச்சிக்குவைரமணி வரிகளுக்குக்காரண
ருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம்.இதோ,
கம்பனின் காவியம் விரிகிறதுஅதில் கண்ணதாசன்
ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது!வாருங்கள் வாருங்கள்,
வந்து பாருங்கள் :

கம்பன் காலம் -மூவருலா, விக்கிரம சோழனுலா...
எனஉலா இலக்கியங்கள் உலா வந்த காலம்!
தன்னேரில்லாத் தலைவன்வீதிவாய் உலா வருகிறான்.;
பேதை முதல் பேரிளம் பெண்கள்ஈறாக உள்ள
எழுபருவத்துப் பெண்கள்மாரன் கணை தொடுக்க,
தலைவனைக் காண்பதற்குவந்து குவிவார்களாம்.
இதனைநேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே
உலாவாகும்இப்புதுவகை இலக்கியத்தில்மனத்தைப்
பறிகொடுத்த கம்பன் தன்காவியத்திலும்
இதன் கூறுகளைத் தொடுகிறான்.
உலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவைபலாப்பழச்
சுவையோடு படைத்து உலாவ விடுகிறான்!

மிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச்
சீதை கரம் பிடிக்கச் சீராமன்வீதகளில் வலம்
வருகிறான்.மாவீரன் வரும்போது மலர் தூவி
வரவேற்பதுமுறை அல்லவா!
அப்படியேஇங்கும் இராமனை வரவேற்கும்
மங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்க
வில்லையாம்!
மாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப் பூமழையாக
அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.

இராமனைக் கண்டு நிலைகுலையும்பெண்களைப்
பற்றிப் பேசும் இப்பகுதிகாதல் பெண்களின்
பெருந்தலைவன் கண்ணதாசனைக் கவர்ந்ததில்
வியப்பில்லைதான்!மான் இனம் போல, மயில் இனம்
போலமீன் இனம் போலக் குவிந்த மகளிர்
தம்மனநிலைகளை - கண்ணினால்காதல்
ன்னும் பொருளையே காணும்உடல், உள்ள
நிலைகளைப் பல பாடல்களில் கம்பன் பாடுகிறான்.

இதில் உள்ள ஒரு பாடல்இலக்கியச் சுவையின்
உச்சியாய் விளங்கும் ஒரு பாடல்கண்ணதாசனைக்
காந்தமாய்க் கவர்ந்திழுக்கிறது.கன்னித் தமிழெடுத்த
கம்பன்தன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி :
அங்கே-சொன்னலம் கடந்த காமச் சுவையை
ஓர் உருவம் ஆக்கிஇன்னலம் தெரியவல்ல
ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி!
மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல்
கொண்ட அவள்உலா வரும் இராமனின்
அழகு நலமெலாம் கண்டுகண்டுநெக்கனள்;,
உருகினள்...பக்கத்தே நிற்கும் தோழியிடம் மறுகினள் :
"நெஞ்சிடை வஞ்சன் வந்துபுக்கனன் போகாவண்ணம்
கண்எனும் புலங்கொள் வாயில்சிக்கென அடைத்தேன்
தோழி சேருதும் அமளி என்றாள்".

கம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன்
தனக்குச்சொந்தமாக்கிக் களிக்கிறார். தனக்கே
உரியசெந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:

"கண் திறந்து நானிருந்தேன்கட்டழகர் குடி
புகுந்தார்கண் திறந்தால் போய் விடுவார்கண்
மூடிக் காத்திருப்பேன்"....
கம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில்
லயித்தவர்அவற்றையே தமதாக மாற்றிநமக்குள்
தமிழ்த் தேனை ஊற்றிஅவர் வரிகளில் நம்மை
லயிக்கவும் ரசிக்கவும் செய்துவிடுகிறார் நம்
மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார்
கவியரசர் பட்டத்தை எய்துவிடுகிறார்.
பிரான்சிலிருந்து

பெஞ்சமின்.

Wednesday, June 25, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(2)




தரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்! அதில்நிரந்தரமாய்ப் பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்!
இந்தக்கம்பக் கடலில் மூழ்காதவர்களே இல்லை!
- இதில்சொம்பள்ளிக் குளித்தாலும்
சுகமாக நீந்திக் களித்தாலும்கிட்டுகின்ற
இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை!
வ.வே.சு ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும்அறிஞர் அண்ணா துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும்மு.மு.இசுமாயிலாகட்டும்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதில் மூழ்கியவர்கள்தாம்!தமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை உண்டு ரசித்தவர்கள்தாம்!
இந்த வரிசையிலே முந்திக்கொண்டுவந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.
பூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ,
கம்பன்பாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.
கம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகிகம்பன் அமுதை அள்ளிப் பருகிஉள்வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம்கள்வாங்கிய திரைப்படப் பாடலாகமாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தேபோற்றி வருகிறது! ஏனெனில்கம்பன் என்ற பெயரேகொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு!
'செந்தாழம் பூவில்' என்னும் பாட்டில்"இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை" என்கிறார் கண்ணதாசன்.
ஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :
'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா!
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா!
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா!
எனக் கேட்டு நமக்குள்எல்லை இல்லா
இன்பம் ஊட்டும் கவிஞர்,என்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :
'கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!"
சீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன்காதலியைக் காணும் கவிஞருக்கு யாருடையசீதையைப் பிடித்திருக்கிறது பாருங்கள்!
கம்பனின் சீதைதான் பிடித்திருக்கிறதாம்!
ஏன் தெரியுமா?
கம்பன் என்றொரு மானிடன்
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி
அவனைப்போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!கண்ணதாசனின் வரிகள்-மாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும்மாணிக்க வரிகள்!

அவள் ஒரு மேனகை என்ற பாடலில்,
'என்ன சொல்லி என்ன பாடக்கம்பன் இல்லை கவிதை பாட' என்றும்
'அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா" என்றும்இன்னும் பல இடங்களிலும்
கம்பன் பெயரை வைத்திழைத்தேசெம்பொன்னாய் ஒளிரும் பாடல்களைப்படைத்திருக்கிறார் கண்ணதாசன்!
கம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச்சான்றுகள்
அல்லவா, இவை!

'கண்ணதாசன்ரசித்த கம்பன்'


கடந்த ஞாயிறு 22 06 08 அன்று இங்கே பிரான்சு நாட்டில் மோ என்ற நகரில்அவர் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
அந்தநகரில் தான்'பிரான்சுக் கண்ணதாசன் கழகம்'என்ற ஒன்றை நண்பர் சிவப்பிரகாசம் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக்கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு 4ஆம் ஆண்டு. அவ்விழாவில் 'கண்ணதாசன்ரசித்த கம்பன்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற அடியேன்அழைக்கப்பட்டிருந்தேன். கவிஞர் கி.பாரதிதாசன் தலைமையில் பட்டி மன்றம்ஒன்று நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசனின் திரைப் படப்பாடல்கள் நின்றுநிலைப்பதற்குக் காரணம்கருத்தழகே என்று மகளிர் மூவர் (திருமதிகள் ஆதலட்சுமி வேணுகோபால்,தனசெல்வி தம்பி, பூங்குழலி பெருமாள்) வாதிட்டனர். சொல்லழகே என்ற அணியில்நின்றுஎதிர்வாதம் செய்த மங்கையர்கள் : திருமதிகள் சரோசா தேவராசு,பிரகதீசுவரி சிவப்பிரகாசம், ராசி சிமோன். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமேமக்களைப் பெரிதும் கவர்ந்தன.
எளியேன் சிறப்புரையிலிருந்துசில பகுதிகள் உங்கள் பார்வைக்கு :
கண்ணதாசன் ரசித்த கம்பன்(பகுதி 1)(பிரான்சுக் கண்ணதாசன் கழகம பரி நகரின் (Paris) புற நகராம் மோ என்னும்பெரு நகரில் 22ஃ06ஃ08 ஞாயிறு அன்று கவியரசர் கண்ணதாசன் விழாவைச்சிறப்பாகக் கொண்டாடியது. அவ்விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆற்றியசிறப்புரை.)
வானிலே வலம் வரும் ஆதவனுக்குஅறிமுகம் தேவை இல்லை!இரவிலே உலா வரும் நிலாவுக்கும்அறிமுகம் தேவை இல்லை!தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;திகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே!ஏனெனில்,கண்ணதாசன் -காவியத் தாயின் இளைய மகன்,காதற் பெண்களின் பெருந்தலைவன்!அவன் நிரந்தரமானவன், அழிவதில்லை!எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை!கால் போட்ட மதுவிலும் கால் நீக்கிய மாதுவிலும் வழுக்கி வீழ்ந்தவன்!மனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்!
அந்தக்கண்ணதாசன் திரைப்படத் துறையில்கால் பதித்த காலத்தில்; திரைப் பாடல்களில்பக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார்,பாபநாசம் சிவன்.முத்து முத்தான கருத்துகளைச்சினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார்பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்..இந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்தஇக்கவிஞன்,தான் படித்துச் சுவைத்திருந்தபைந்தமிழ் இலக்கியங்களை,வைரமாய் ஒளி வீசும் இலக்கிய வரிகளை,கருத்துக் கருவூலங்களைத்தன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.பாமர மக்களையும் அவற்றைச் சுவைக்க வைத்தான.;
பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன்நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.பிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது.அதைப் போலத்தான்கண்ணதாசன் என்னும் மேகம்தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத்தன் பாடல் வரிகளில்எளிய மொழியில் மழையாகப்பொழிந்து தள்ளுகிறது.
எடுத்துக்காட்டாக,இப்பாடலைப் பாருங்களேன் , பாடிப் பாருங்களேன்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுகமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இருகைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டேபற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!"
பாட முடிகிறதா,பாடினாலும் பொருள் புரிகிறதா...புரிந்தாலும் உள்ளத்துக்குள் புகுகுகின்றதா!படித்திருக்கும் உங்களுக்குப் புரிந்தாலும்ஏட்டையே தொட்டிராதஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமா!
பட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது!அவர் பாடல்களும் கடல்தான்!அந்தக் கடல் மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்தகண்ணதாசன் என்னும் மேகம், இந்தப் பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது.மூலக்கருத்து சிதையாமல்பாலொடு தேன் கலந்தது போல்பொருத்தமான சொற்களால்மழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :
வீடுவரை உறவுவீதி வரை மனைவிகாடுவரை பிள்ளைகடைசி வரை யாரோ!
கல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்!படியாத பாமரர்க்கும் புரிகின்ற மொழிகள்!இதுதான்கண்ணதாசன்!
இலக்கிய வரிகளை, கருத்துகளைத்தன் திரைப்படப் பாடல்களில்கலக்கிக் கொடுத்த கண்ணதாசனுக்குக்கம்பன் மேல் தணியாத காதல்!கம்பன் மேல் கரைகடந்தகாதல் கொள்ளாதகவிஞன் எவனுண்டு!
கம்பனைப் பாட வரும்கண்ணதாசன்,'பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளிவைத்த கம்பனுக்கு ஈடு - இன்னும்வித்தாகவில்லை என்றே நீ பாடு'என்று பாடுகிறான்!

Wednesday, April 30, 2008

பாரதிதாசனைப் பற்றிய தவறான கண்ணோட்டம் (பகுதி 2)





பாரதிதாசனைப்பற்றிய

தவறான

கண்ணோட்டம் (பகுதி 2)

தமிழ்க் கவிதையைப் பதிய பாதையில் இட்டுச் சென்ற
பாரதி என்ற அச் சாரதியை,
தமிழைப் பற்றி, தமிழுணர்வைச் சுற்றி,
தமிழ்த் தொண்டாற்றித் தமிழையே போற்றிக்
கங்கையைப் போல், காவிரியைப் போல்
கவிதை வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்த
கனகசுப்பு ரத்தினம் சந்தித்த அந்த நிகழ்ச்சி...
நினைத்தாலே அகமெல்லாம் இனிப்பு
படித்தாலோ முகமெல்லாம் சிரிப்பு!
அதனைப் பாவேந்தர்
வடித்திட்ட சொல்லாலே
படித்திட்டால் தானே சிறப்பு!

இதோ கனகசுப்பு ரத்தினமே வருகிறார்
அதனை நமக்குத் தருகிறார் :

"பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில்படித்தவர்களிடையே உலவியிருந்தது.
குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்)
அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட
நான் கேட்டிருக்கிறேன். என்ஆசைக்கு ஒரு
புத்தகம் கிடைத்தது ஒரு நாள் - சுதேசக்
கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு
முணுமுணுத்து வந்தேன்.'இந்தியா' பத்திரிகையில்
சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன்
தருமராஜா கோயில் தெரு வளைவுகள்,
குவளையின் கூச்சல் இவை எல்லாம்
சுதேசகீதங்களின் உட்பொருளை எனக்கு
விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான
உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற
அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப்
பாடமுடிந்தது நாளடைவில்!

எனது கொட்டடி வாத்தியார் வேணு
நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது.
மாலை 3மணிக்குக் கல்யாணப் பந்தல்
பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில்
நானும்ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ!" என்பதை.
அப்போது என் பின் ஒருபுறமாக,
இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில
உருவங்கள் உட்கார்ந்திருந்தன.
அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.

வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.
நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற
பாட்டைப் பாடினேன்.

சபையில் இருந்தவர்கள் மொத்தம்
முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில்
சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது,
அந்த ரவிவர்மா பரமசிவத்தையே
பார்க்கிறார்கள்!

அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன
என்று எனக்குத் தெரியாது. ஆனால்அவர்
ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம்
என்று தோன்றிற்று.

என்னை மேலும் பாடச் சொன்னார்
வேணு நாய்க்கர். பாடினேன்.
அப்போது வேணு நாய்க்கர்,
"அவுங்க யார் தெரியுமில்ல?" என்று கேட்டார்.
தெரியாது என்று கூட நான் சொல்லி
முடிக்கவில்லை. ரவிவர்மா படம்:
"நீங்கதமிழ் வாசிச்சிருக்கீங்களோ?" என்று
என்னைக் கேட்டார்.

நான்: "கொஞ்சம்."
'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."

வேணு நாய்க்கர், அப்போது,
"அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது.
சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?"
என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு
அறிமுகப்படுத்தினார்.

எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என்
மூஞ்சியை நான் கண்ணாடிஎடுத்துப் பார்த்துக்
கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான்
ஓர் அசல் இஞ்சிதின்ற குரங்கு!

பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார்,
நான் அப்போது என்ன பதில் சொன்னேன்
என்பவைகளைக் கேட்டால் அப்போதே
என்னால் சொல்ல முடியாது. இப்போது
என்னால்சொல்ல முடியுமா?

கடைசியாக பாரதியார் செல்லிய வார்த்தையை
மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என்
ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த
வார்த்தையை அவர்வெளியிட்டவுடன் என்
நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி
விடக் கூடும்என்று அதன் முதுகின் மேல் ஏறி
உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.

அவர் கூறிய வார்த்தைகளாவன:
"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு
நீ அழைத்து வரலே?"

நான் வீதியில் அடிக்கடி பார்த்து,
"இவர் ரவிவர்மா படத்தில் காணும்பரமசிவம்
போல் இருக்கிறார்" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த
மனிதர்பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று.
அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று.

அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு
முருகேசம் பிள்ளை முதலியவர்களால்
பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று
-- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச்சந்தோஷமயமாக்கிவிட்டன.

மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன்
பாரதியார் வீட்டுக்குப் போகப்போகிறேன். மறுநாள்
என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான்
கவலையாய்க்கிடந்தது.

நானும் வேணு நாய்க்கரும் பாரதியார்
வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்...
வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின்
உச்சரிப்பு என் காதில்கேட்கிறது. நான் மாடியின்
கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில்
பாடிக்கொண்டிருக்கும் சிவா நாயகரை,
வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி
சாமிநாதஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப்
பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார்
'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன்.
பாரதியார் கும்பிட்டு,"வாருங்கோ, உட்காருங்கோ.
வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ"என்றார்.
சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று
பெயர்வைத்திருந்தார்.

பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு.
அதன் பிறகு என்னைப் பற்றியவிவரம் நடந்தது.
கொஞ்ச நேரம். "எனக்கு உத்தரவு கொடுங்கள்"
என்றுபாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக
உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு
அவ்வளவாகப்பிடிக்கவில்லை. அங்கு ஒரு
மூலையில் கிடந்த கையெழுத்துப்
புத்தகத்தைப்பார்க்க வேண்டும் என்பதிலேயே
என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது.
மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில்
உட்கார்ந்தேன். பிறகுஅதைக் கையில் எடுத்தேன்,
விரித்தேன்... வசமிழந்தேன்.

நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே
என் காலத்தைக் கடத்தியிருந்தவன்.என் ஆசிரியரும்,
புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர்,மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை
இவர்களால் நடத்தப்படும் கலைமகள்கழகத்தின்
அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே
யாருக்கும்புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம்எழுதும்போதுகூடக்
கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்றதப்பெண்ணமுடையவன்.

பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர்
உலகில் சேர்த்தது.
நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள
கையெழுத்துப் புத்தகமும் ஒருபக்கம்; என் அறிவும்
அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும்
ஒருபக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச்
சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ளஎளிய சொற்களும்
ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை,
அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக்
கவனிக்க என்னிடம்மீந்திருந்த உறுப்புக்கள்
ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.

இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த
ராஜுலு நாயுடு பீடிபிடித்தாயிற்று. பாரதியாரும்
சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று.
மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர்
என்னைப் பாரதியாருக்குச்சுட்டிக்காட்டி, "இவர்
தமிழ் வாசித்தவர் சுவாமி" என்றார்.
அதற்குப்பாரதியார், "இல்லாவிட்டால் என் கையெழுத்துப்
புத்தகத்தில் அவருக்கு என்னஇருக்கிறது?" என்றார்,
அன்புடன், நல்லெண்ணத்துடன்.

அதன் பிறகு நான், "போய் வருகிறேன்,
சுவாமி" என்றேன். பாரதியார், "சரி,நேரமாகிறதா?
நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்" என்றுகுறிப்பிட்டார்.
அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட
முடியவில்லை."நமஸ்காரம், நமஸ்காரம்"
என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய
எண்ணமில்லாதுபிரிந்தேன்.
என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.

நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி
முழுவதும் பாரதியாரின்குணாதிசயங்களை
விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில்
சற்றுநேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள்
நூதனமாக ஒன்றும் கூறவில்லை!"

இப்படியாகத்தான்
அந்த இருபெருங் கவிஞர்களின் சந்திப்பு
நல்லதொரு (திருமண) நாளில் நடந்தது.

அவர்கள் நட்பும் தொடங்கியது, தொடர்ந்தது.

பாரதிதாசனின் கவிதை நடையையே மாற்றியவர்
பாரதியார். இதனைப் பாரதிதாசனே ஒப்புக் கொள்வதை
மேலே படித்து உணர்ந்தோம்.

எங்கிருந்தோ வந்து தமிழ்ச் சாதிதானென்று
சொன்ன அந்தப் பாரதியைப் பைந்தமிழ்ப பாகனை,
நண்பனாய், மந்திரியாய் (த் தன் கவிதைப்
பாதையை மாற்றித் தந்த)
நல்லாசிரியனாய்ப் பண்பிலே தெய்வமாய்
வாழ்ககையிலே தோழனாய்ப்
பார்த்துப் பழகியவர்தாம் பாரதிதாசனார்.

பத்தாண்டுக் காலம் பாரதியார்க்கு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது பாசங் காட்டியும்
பிறர்க்குத் தெரியாமல் வயிற்றிலே
சோற்றைக் கட்டிககொண்டு போய் ஊட்டியும்
வந்தவர்தாம் பாரதிதாசனார்.

இப்படியாகப் பாரதியின் தேர்வுத் 'தராசில்'
கனகசுப்பு ரத்தினம் நின்றார்
அவர் நட்பினை வென்றார்!

(பாரதியின் 'தராசு' படித்துப் பாருங்கள்!
நான் சொல்வது புரியும்!).

எங்கிருந்தோ வந்தான் தமிழச் சாதி நானென்றான்
இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
என்று பாரதியார், கனகசுப்பு ரத்தினத்தைத் தோழனாகவே
ஏற்றுக் கொண்டார்என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!

சுருக்கமாகச் சொன்னால்,
பாரதியாருக்கு இருந்த இலக்கண, இலக்கிய அறியாமை
கனகசுப்பு ரத்தினத்தின் நட்பால், தொடர்பால் வற்றியது!

பாரதியின் எளிய தமிழ் புலமை மிடுக்கேறிய
கனகசுப்பு ரத்தினத்தைப் பற்றியது.

இவ்வண்ணம்,
பாரதியார்,
பாரதிதாசனால் நன்மைகள் பல பெற்றதும்
பாரதிதாசன் கவிதை நடை
பாரதியாரால் புதுப் பொலிவு உற்றதும்
வரலாற்று உண்மைகள்!
எனவே,
பாரதிக்குத் தாசன் என்று பெயரை மாற்றிக்கொண்ட
காரணத்தாலேயே
பாரதிக்கு அவர் சீடன் என்று அவசரமாக
முடிவு கட்டாதீர்கள் - தவறாக
முரசு கொட்டாதீர்கள்!
(இத்துடன் இது முடிந்தாலும்,
முடிந்தால் மேலும் தொடரும்)

இன்றைய நாள் -
புரட்சிக் கவி பாவேந்தர் பிறந்த நாள்!
தமிழுக்கே தன்னைத் தந்த அந்த
அமுதுக்கு இந்தப் படைப்பு, காணிக்கை!
நட்புடன்
பெஞ்சமின் லெபோ_..

**********************************************