Wednesday, April 30, 2008

பாரதிதாசனைப் பற்றிய தவறான கண்ணோட்டம் (பகுதி 2)





பாரதிதாசனைப்பற்றிய

தவறான

கண்ணோட்டம் (பகுதி 2)

தமிழ்க் கவிதையைப் பதிய பாதையில் இட்டுச் சென்ற
பாரதி என்ற அச் சாரதியை,
தமிழைப் பற்றி, தமிழுணர்வைச் சுற்றி,
தமிழ்த் தொண்டாற்றித் தமிழையே போற்றிக்
கங்கையைப் போல், காவிரியைப் போல்
கவிதை வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்த
கனகசுப்பு ரத்தினம் சந்தித்த அந்த நிகழ்ச்சி...
நினைத்தாலே அகமெல்லாம் இனிப்பு
படித்தாலோ முகமெல்லாம் சிரிப்பு!
அதனைப் பாவேந்தர்
வடித்திட்ட சொல்லாலே
படித்திட்டால் தானே சிறப்பு!

இதோ கனகசுப்பு ரத்தினமே வருகிறார்
அதனை நமக்குத் தருகிறார் :

"பாரதியார் பாடி வெளியிட்டிருந்த ' சுதேச கீதங்கள்' புதுச்சேரியில்படித்தவர்களிடையே உலவியிருந்தது.
குவளை (குவளை கிருஷ்ணமாச்சாரியார்)
அந்தப் பாட்டுக்களில் சிவற்றைக் கூவிப் பாட
நான் கேட்டிருக்கிறேன். என்ஆசைக்கு ஒரு
புத்தகம் கிடைத்தது ஒரு நாள் - சுதேசக்
கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு
முணுமுணுத்து வந்தேன்.'இந்தியா' பத்திரிகையில்
சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன்
தருமராஜா கோயில் தெரு வளைவுகள்,
குவளையின் கூச்சல் இவை எல்லாம்
சுதேசகீதங்களின் உட்பொருளை எனக்கு
விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷயமான
உணர்வோடும், 'நான் ஓர் இந்தியன்' என்ற
அகம்பாவத்தோடும் அப்பாடல்களைப்
பாடமுடிந்தது நாளடைவில்!

எனது கொட்டடி வாத்தியார் வேணு
நாய்க்கருக்குக் கல்யாணம் வந்தது.
மாலை 3மணிக்குக் கல்யாணப் பந்தல்
பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில்
நானும்ஒருவன்.

கணீரென்று ஆரம்பித்தேன்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ!" என்பதை.
அப்போது என் பின் ஒருபுறமாக,
இதற்குமுன் நான் வீதியில் பார்த்த சில
உருவங்கள் உட்கார்ந்திருந்தன.
அவற்றில் ஒன்று ரவிவர்மா 'பரமசிவம்'.

வேணு நாய்க்கர், "இன்னும் பாடு சுப்பு" என்றார்.
நான், "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" என்ற
பாட்டைப் பாடினேன்.

சபையில் இருந்தவர்கள் மொத்தம்
முப்பது பேர் இருக்கும். 30 பேர்வழிகளில்
சுமார் 25 பேர்கள், நான் பாடும் போது,
அந்த ரவிவர்மா பரமசிவத்தையே
பார்க்கிறார்கள்!

அந்த பரமசிவத்தின் பெயர், விலாசம் என்ன
என்று எனக்குத் தெரியாது. ஆனால்அவர்
ஒரு குறிப்பிடத் தக்கவராக இருக்கலாம்
என்று தோன்றிற்று.

என்னை மேலும் பாடச் சொன்னார்
வேணு நாய்க்கர். பாடினேன்.
அப்போது வேணு நாய்க்கர்,
"அவுங்க யார் தெரியுமில்ல?" என்று கேட்டார்.
தெரியாது என்று கூட நான் சொல்லி
முடிக்கவில்லை. ரவிவர்மா படம்:
"நீங்கதமிழ் வாசிச்சிருக்கீங்களோ?" என்று
என்னைக் கேட்டார்.

நான்: "கொஞ்சம்."
'படம்': "உணர்ந்து பாடுகிறீர்கள்."

வேணு நாய்க்கர், அப்போது,
"அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது.
சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்களே?"
என்று 'பரமசிவப் படத்தை' எனக்கு
அறிமுகப்படுத்தினார்.

எனக்கு நாணம். சந்தோசம். பயம். அப்போது என்
மூஞ்சியை நான் கண்ணாடிஎடுத்துப் பார்த்துக்
கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான்
ஓர் அசல் இஞ்சிதின்ற குரங்கு!

பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார்,
நான் அப்போது என்ன பதில் சொன்னேன்
என்பவைகளைக் கேட்டால் அப்போதே
என்னால் சொல்ல முடியாது. இப்போது
என்னால்சொல்ல முடியுமா?

கடைசியாக பாரதியார் செல்லிய வார்த்தையை
மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என்
ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த
வார்த்தையை அவர்வெளியிட்டவுடன் என்
நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி
விடக் கூடும்என்று அதன் முதுகின் மேல் ஏறி
உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.

அவர் கூறிய வார்த்தைகளாவன:
"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு
நீ அழைத்து வரலே?"

நான் வீதியில் அடிக்கடி பார்த்து,
"இவர் ரவிவர்மா படத்தில் காணும்பரமசிவம்
போல் இருக்கிறார்" எனறு ஒப்புக் கூட்டி நினைத்த
மனிதர்பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று.
அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று.

அவர் எங்கள் ஊர் பிரபலஸ்தர் பொன்னு
முருகேசம் பிள்ளை முதலியவர்களால்
பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று
-- அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொண்டு என்னைச்சந்தோஷமயமாக்கிவிட்டன.

மறு நாள் காலையில் நான் வேணு நாய்க்கருடன்
பாரதியார் வீட்டுக்குப் போகப்போகிறேன். மறுநாள்
என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான்
கவலையாய்க்கிடந்தது.

நானும் வேணு நாய்க்கரும் பாரதியார்
வீட்டு மாடியில் ஏறிப் போகிறோம்...
வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின்
உச்சரிப்பு என் காதில்கேட்கிறது. நான் மாடியின்
கூடத்தில் பாரதியாரை, அவர் பக்கத்தில்
பாடிக்கொண்டிருக்கும் சிவா நாயகரை,
வாத்தியார் சுப்பிரமணிய ஐயர் தம்பி
சாமிநாதஐயரை, கோவிந்த ராஜுலு நாயுடுவைப்
பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார்
'ஆஹா' போடும்போது நான் கும்பிட்டேன்.
பாரதியார் கும்பிட்டு,"வாருங்கோ, உட்காருங்கோ.
வேணு உட்கார். குயில் பாடுகிறது. கேளுங்கோ"என்றார்.
சிவா நாயகருக்குப் பாரதியார் 'குயில்' என்று
பெயர்வைத்திருந்தார்.

பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு.
அதன் பிறகு என்னைப் பற்றியவிவரம் நடந்தது.
கொஞ்ச நேரம். "எனக்கு உத்தரவு கொடுங்கள்"
என்றுபாரதியார் அதே கூட்டத்தில் ஒரு புறமாக
உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.மீதியுள்ள நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். எனக்குப் பேச்சு
அவ்வளவாகப்பிடிக்கவில்லை. அங்கு ஒரு
மூலையில் கிடந்த கையெழுத்துப்
புத்தகத்தைப்பார்க்க வேண்டும் என்பதிலேயே
என் எண்ணம் சென்று மீண்ட வண்ணமிருந்தது.
மெதுவாக நகர்ந்து அந்தப் புத்தகத்தின் பக்கத்தில்
உட்கார்ந்தேன். பிறகுஅதைக் கையில் எடுத்தேன்,
விரித்தேன்... வசமிழந்தேன்.

நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே
என் காலத்தைக் கடத்தியிருந்தவன்.என் ஆசிரியரும்,
புதுச் சேரியில் பிரபல வித்துவானுமாகிய பங்காரு பத்தர்,மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை
இவர்களால் நடத்தப்படும் கலைமகள்கழகத்தின்
அங்கத்தினன். பழந்தமிழ்ச் செய்யுட்கள் போலவே
யாருக்கும்புரியாதபடி எழுதுவதுதான் கவிதை என்ற அபிப்பிராயமுள்ளவன். கடிதம்எழுதும்போதுகூடக்
கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கௌரவம் என்றதப்பெண்ணமுடையவன்.

பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர்
உலகில் சேர்த்தது.
நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள
கையெழுத்துப் புத்தகமும் ஒருபக்கம்; என் அறிவும்
அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும் விஷயமும்
ஒருபக்கம். என் உள்ளமும் அதில் இனிப்பைச்
சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ளஎளிய சொற்களும்
ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை,
அங்கிருந்த மற்றவர்களை, அவர்கள் வார்த்தைகளைக்
கவனிக்க என்னிடம்மீந்திருந்த உறுப்புக்கள்
ஒன்றுமில்லை. இப்படி வெகு நேரம்.

இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது. கோவிந்த
ராஜுலு நாயுடு பீடிபிடித்தாயிற்று. பாரதியாரும்
சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று.
மணியும் 11 ஆயிற்று. கடைசியாக, சிவா நாயகர்
என்னைப் பாரதியாருக்குச்சுட்டிக்காட்டி, "இவர்
தமிழ் வாசித்தவர் சுவாமி" என்றார்.
அதற்குப்பாரதியார், "இல்லாவிட்டால் என் கையெழுத்துப்
புத்தகத்தில் அவருக்கு என்னஇருக்கிறது?" என்றார்,
அன்புடன், நல்லெண்ணத்துடன்.

அதன் பிறகு நான், "போய் வருகிறேன்,
சுவாமி" என்றேன். பாரதியார், "சரி,நேரமாகிறதா?
நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்" என்றுகுறிப்பிட்டார்.
அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட
முடியவில்லை."நமஸ்காரம், நமஸ்காரம்"
என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய
எண்ணமில்லாதுபிரிந்தேன்.
என்னுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.

நாயகர், சாமிநாத ஐயர், நாயுடு அனைவரும் வழி
முழுவதும் பாரதியாரின்குணாதிசயங்களை
விவரித்தார்கள். நான் பாரதியாரின் விழிகளில்
சற்றுநேரத்தில் தரிசித்தவைகட்குமேல் அவர்கள்
நூதனமாக ஒன்றும் கூறவில்லை!"

இப்படியாகத்தான்
அந்த இருபெருங் கவிஞர்களின் சந்திப்பு
நல்லதொரு (திருமண) நாளில் நடந்தது.

அவர்கள் நட்பும் தொடங்கியது, தொடர்ந்தது.

பாரதிதாசனின் கவிதை நடையையே மாற்றியவர்
பாரதியார். இதனைப் பாரதிதாசனே ஒப்புக் கொள்வதை
மேலே படித்து உணர்ந்தோம்.

எங்கிருந்தோ வந்து தமிழ்ச் சாதிதானென்று
சொன்ன அந்தப் பாரதியைப் பைந்தமிழ்ப பாகனை,
நண்பனாய், மந்திரியாய் (த் தன் கவிதைப்
பாதையை மாற்றித் தந்த)
நல்லாசிரியனாய்ப் பண்பிலே தெய்வமாய்
வாழ்ககையிலே தோழனாய்ப்
பார்த்துப் பழகியவர்தாம் பாரதிதாசனார்.

பத்தாண்டுக் காலம் பாரதியார்க்கு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது பாசங் காட்டியும்
பிறர்க்குத் தெரியாமல் வயிற்றிலே
சோற்றைக் கட்டிககொண்டு போய் ஊட்டியும்
வந்தவர்தாம் பாரதிதாசனார்.

இப்படியாகப் பாரதியின் தேர்வுத் 'தராசில்'
கனகசுப்பு ரத்தினம் நின்றார்
அவர் நட்பினை வென்றார்!

(பாரதியின் 'தராசு' படித்துப் பாருங்கள்!
நான் சொல்வது புரியும்!).

எங்கிருந்தோ வந்தான் தமிழச் சாதி நானென்றான்
இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
என்று பாரதியார், கனகசுப்பு ரத்தினத்தைத் தோழனாகவே
ஏற்றுக் கொண்டார்என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!

சுருக்கமாகச் சொன்னால்,
பாரதியாருக்கு இருந்த இலக்கண, இலக்கிய அறியாமை
கனகசுப்பு ரத்தினத்தின் நட்பால், தொடர்பால் வற்றியது!

பாரதியின் எளிய தமிழ் புலமை மிடுக்கேறிய
கனகசுப்பு ரத்தினத்தைப் பற்றியது.

இவ்வண்ணம்,
பாரதியார்,
பாரதிதாசனால் நன்மைகள் பல பெற்றதும்
பாரதிதாசன் கவிதை நடை
பாரதியாரால் புதுப் பொலிவு உற்றதும்
வரலாற்று உண்மைகள்!
எனவே,
பாரதிக்குத் தாசன் என்று பெயரை மாற்றிக்கொண்ட
காரணத்தாலேயே
பாரதிக்கு அவர் சீடன் என்று அவசரமாக
முடிவு கட்டாதீர்கள் - தவறாக
முரசு கொட்டாதீர்கள்!
(இத்துடன் இது முடிந்தாலும்,
முடிந்தால் மேலும் தொடரும்)

இன்றைய நாள் -
புரட்சிக் கவி பாவேந்தர் பிறந்த நாள்!
தமிழுக்கே தன்னைத் தந்த அந்த
அமுதுக்கு இந்தப் படைப்பு, காணிக்கை!
நட்புடன்
பெஞ்சமின் லெபோ_..

**********************************************

Saturday, April 26, 2008

<>தவறான கண்ணோட்டம் (பகுதி 1)<>



பாரதிதாசனைப் பற்றிய
தவறான கண்ணோட்டம்
பேரா.பெஞ்சமின் லெபோ, பிரான்சு.

தணியாத காதல் தமிழ் மீது கொண்டு அணிஅணியாகத்தமிழ் உணாச்சிப் பாடல்களைப் புனைந்தவர்புதுவைக் கவிஞர் பாரதிதாசனார்.
கனகசுப்பு ரத்தினம் எனபது இவர்தம் இயற்பெயர்.இவரை ஈர்த்த பெருங்கவிஞர் பாரதியார். இந்த ஈர்ப்பின்விளைவாகத்தான் தம் இயற்பெயரையே பாரதிதாசன் எனமாற்றிக்கொண்டவர்.
பாரதிதாசன் பற்றித் தவறான கருத்துகள்பல தோன்ற இப்பெயரே காரணமாயிற்று. பாரதிதாசனின்வரலாறு சரிவரத் தெரியாத பலர், அவருக்கும் பாரதிக்கும்இருந்த உறவினைத் திரித்துப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.காட்டாக,
1)பாவேந்தன் என்ற அடையை விடப் புரட்சிக்கவி என்றஅடையே பாரதிதாசனுக்குப் பொருந்தும் என மிகச் சிறப்பாகவாதிடும் கவிஞர் கவிஞர் தணிகைச் செல்வன் கூட,'பாரதிதாசனின் ஆசான் என்று பாரதி கருதப்பட்டாலும்,பாரதியின் கருத்துகள்,பிரான்சு.மலர்ச்சியைச்
சார்ந்தனவாயிருந்தன." என்றுதான் எழுதுகிறார். (காண்க : நன்றி கீற்றுளுரனெயல, 6 ஆயல, 2007 பாரதி எ பாரதிதாசன்).2) 2005 -ஆம் ஆண்டு மே மாதம் கனடா நாட்டில் கவிஞர்புகாரி அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.அவ்விழாவில் கவிஞர் நூலுக்கு மதிப்புரை வழங்கிய திரு ஜெயபாரதன்' அழகின் சிரிப்பு நூலை விரித்துக் கவிதைகளை ஊன்றிப் படித்தேன்.

பாரதிக்குத் தாசர் அல்லவா? பாரதியாரைப் போல் இருக்கிறாரா என்றுஆய்ந்தேன். பாரதியைப் படித்த எனக்குப் பாரதிதாசனின் சில கவிதைகளைப்படித்த பின், அவர் மீது ஏனோ பிடிப்பு ஏற்பட வில்லை!; "என்கிறார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு கிரீதரன் ('பதிவுகள்' ஆசிரியர்) எழுதிஉள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் திரு ஜெயபாரதன்,"...ஆனால் பாரதியின்நிழலில் தோன்றித் தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுப்புரத்தினம் மெய்யாகப் பாரதியாரின் சீடராஎன்பதைத்தான் நான் சிந்தித்து உளவு செய்கிறேன்.

முதலில் பாரதியின் சீடராய்த் துவங்கிப்பாதி காலத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டு வேறுவடிவில் உலவி வந்தார் பாரதிதாசன் என்பதைத்தான் நான்கூற விரும்புகிறேன். " என எழுதுகிறார்.பாரதிதாசன் பற்றிப் பலரும் கொண்டுள்ள (தவறான)கருத்துகளைத்தான் இவர்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.அதாவது, கனகசுப்பு ரத்தினம் பாரதியாரிடம் பயின்றவர்,பாரதியின் மாணாக்கர், பாரதியால் உருவானவர்... என்பதுஇவர்கள் கொண்டுள்ள கருத்து.உண்மை என்ன? பாரதி புதுவைக்கு வருமுன்னரே,கனகசுப்பு ரத்தினம் தம் (தமிழ், பிரஞ்சு) கல்வியைமுடித்து ஆசிரியர் பணியிலும் அமர்ந்துவிட்டிருந்தார்.கனகசுப்பு ரத்தினம் முறையாகத் தமிழ் (திரு பங்காருசாமிப்பத்தர் என்னும் புகழ்பெற்ற புதுச்சேரிப் புலவரிடம்) பயின்றவர்.யாப்பிலக்கணம் நன்கறிந்தவர். கவி புனையும் ஆற்றலும் மிக்கவர்.
ஆனால் பாரதி அப்படி அல்லர். கவிபாடும் வல்லமை இயற்கையாகஅவரிடம் அமைந்திருந்தது. மற்றபடி தமிழை முறையாகப்படித்தவரில்லை பாரதி, யாப்பும் அறிந்தவர் அல்லர்."... பாரதியாருக்குப் பள்ளிப் படிப்பில் மிகுதியாகப் பற்றில்லை...தொடக்க முதலே பாரதியார் ஆங்கிலக் கல்வி நிலையங்களிலேயேபடித்தார். தனித் தமிழ்; ஆசிரியரிடம் அவர் தமிழ்ப் பாடம் கற்றதில்லை." (பாரதியாரின் வாழ்க்கை வரலாறு - டாக்டர் தா.ஏ ஞானமூர்த்தி). பாரதிபாட்டுக்களில் இருந்த எழுத்துப் பிழைகளை, தட்டும் தளைகளை,யாப்புக் குறைகளைக் களைந்து திருத்தியவர் கனகசுப்பு ரத்தினம்தாம்!

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்-1 என்ற கட்டுரையில்திரு வெங்கட் சாமிநாதன் கூறுகிறார்:"புதுச்சேரியில் பாரதியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்இன்னும் பலர் இருந்தனர். கவிஞர் பாரதிதாசன் (1891-1964) அவர்களில்ஒருவர். அவர் பாரதியாலேயே கவிஞராக முடிசூட்டப் பெற்றவர்.பாரதிதாசன் என்றே அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.

கவிஞராக மட்டுமே அவர் பாரதிக்கு நெருக்கமாக இருக்கவில்லை. ...பல பொறுப்புகளைப் பாரதிதாசன்தான் மேற்கொண்டிருந்தார்."எனவே, பாரதியார் இவரைத் தம் சீடராகப் பார்த்ததும் இல்லை,சீடராகப் பழகியதும் இல்லை! நண்பராகவும் தோழராகவும்தான்பார்த்திருக்கிறார், பழகி இருக்கிறார். எனவே கனகசுப்பு ரத்தினம்தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டாலும், அவர்பாரதியாருக்குச் சீடராக வாழவில்லை, தம் கவிதை வாழ்வையும்பாரதி நிழலிலே தொடங்கவில்லை. பாரதியார் புதுவை வாழ்வைத்தொடங்கும் முன்னரே கனகசுப்பு ரத்தினம் தனக்கெனஒரு பெயரைப் புதுவையிலே பெற்றிருந்தார்.

பாரதியாரும் கனகசுப்புவும் சந்தித்த அந்த முதற் சந்திப்பைஅடுத்த பகுதியில் காண்போம்.அச்சமயம் பாரதி சொல்லிய சொல்லைக் கனகசுப்புரத்தினமே பதிவு செய்த வரிகள் :

"கடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம்நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்திசெய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன்என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும்என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.அவர் கூறிய வார்த்தைகளாவன:"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?"

-மற்றவை அடுத்த பாகத்தில்.....

<>கவிஞனின் காதலி<>


<>கவிஞனின் காதலி<>

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ


என்னுயிர்த் தோழி,

இனிதே வாழி!


என்னவனைப் பற்றி எழுதச்

சொன்னாய்,

அந்த என்னவன் -பாண்டியன்

பரிசு தந்த தென்னவன், எனை

ஆளும் மன்னவன்!


புதுவைக் குயில், புரட்சிக் கனல்!

ஏற்றமிகு தோற்றம் அவனுக்கு-

நிமிர்ந்த நெஞ்சு,

நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும்

அஞ்சாத் தோற்றம்!


திமிர்ந்த ஞானச் செருக்கு! வானளந்த

புகழை எல்லாம் தேனளந்த தமிழாலே

தானளந்த தமிழ் மகன். இருபதாம் நூற்றாண்டின்

இணையற்ற கவிஞன்! அவன் படைத்த

காதல் கவிதைகள்- தமிழ்த்; தேனில்

ஊறிய பலாச் சுளைகள்!

புரட்சிப் பாடல்களோ பொங்கும் எரிமலைகள்!


அந்த புரட்சிக் கவியிடம் உள்ளத்தைப்

பறிகொடுத்தேன். அவன் அழகின் சிரிப்பிலே

எனை மறந்தேன்!


சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே கொஞ்சி மகிழ்ந்தேன்.

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத

அவன் தமிழ் உணர்வில் நெகிழ்ந்தேன்.


அவன் அளித்த எதிர்பாராத முத்தம் நெஞ்சில்

இனிக்குமே நித்தம். குடும்ப விளக்கென

என்னைக் கொண்டாடும் அவனை மணந்தேன்.

அவனும் நானும் - ' வெண்ணிலாவும் வானும்

போலேவீரனும் கூர் வாளும் போலேவண்ணப்பாவும்

மணமும் போலே ' இணைபிரியாமல் இனிதே

வாழ்ந்து வருகிறோம்.


எங்கள் ஊடலில், கூடலில், உறவாடலில் எத்தனை

எத்தனை பாடல்கள்! அவற்றுள் சிலவற்றை

உனக்குச் சொல்லட்டுமா?


ஒருநாள்.... ' என்மீது உனக்கேன் இவ்வளவு காதல்? '

என்றேன். அவ்வளவில்,;


' தென்னவளே, தேனமுதே! என்னடி அப்படிக் கேட்டு

விட்டாய், மூவேந்தர் மடி வளர்ந்த முத்தமிழ்ச் செல்வி நீ!


பாவேந்தர் பாடிவளர்த்த பாவை நீ!

தமிழ், தமிழ், தமிழ் என உன் பெயரை உரைக்கும்

போதெல்லாம் என் நாவில் ஊறுவது அமிழ்தல்லவா!

அதனால்தான், என் உயிரே உன் மீது காதலாகிக்

கசிந்து உருகித்' தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு

நேர்'எனப் பாடினேன் என்றானடி அவன்.


பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம்

மெதுவாகத் தொடங்கினேன் :


' கண்டு கேட்டு உண்டு, உயிர்த்து உற்றறியும்

ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள எனப்

பெண்ணின்பத்தைப் புகழ்ந்து வள்ளுவர் பாடினார்.


வள்ளலாரோ -


'காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற

ஏமமிகு கற்பினள்;தன் இன்பினும் இன்பாயது

"இறைவனேடு இணைகின்ற பேரின்பம் என

அதனைத் தேடினார். நீயோ அவர்கள் இருவரையும்

விஞ்சிவிட்டாய் ' என்றேன்.


உடனே, ' எப்படி, எப்படி, எப்படி? ' எனத் துடித்தான்.


' அப்படி வா வழிக்கு, ' மங்கை ஒருத்தி தரும்

சுகமும் மாத்தமிழுக்கு ஈடில்லை 'எனப் பாடியவன்

நீ தானே ' என்று மடக்கினேன்!


' ஆமடி, அஃதுண்மை தானடி, ஊனில் கலந்து

உயிரில் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற,'

செந்தமிழே நறுந்தேனே என் செயலினை

மூச்சினை உனக்களித்தேனேநைந்தாய்

எனில் நைந்துபோகும் என் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்குந்

தானே! 'என்று என்னை வாரி அணைத்துக்

கொண்டானடி, என் தோழி.

சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே வம்புக்கு

இழுத்தேன் :'ஐயா கனக சுப்புரத்தினமே தாங்கள்

பாரதிதாசனாக மாறிய மர்மம் என்னவோ?


' உடனே, 'நமக்குத் தொழில் கவிதை எனப் பெரு

மிதங்கொண்ட முறுக்கு மீசைப் புலவனுக்குத்

தாசனடி நான். அதனாலே, இந்தப் பெயர் மாற்றம்

' என்று இந்த

நறுக்கு மீசைக் கவிஞன் சொன்னான்.


விடுவேனா நான், மேலும் சீண்டினேன் : ' ஏய்,

'கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என்றன்

உள்ளத்தைப்புண்ணாக்கிப் போடாதேபோ

போ போய்விடு'எனச் சற்றுமுன் என்னை

விரட்டியவனே, பச்சைப் பொய் சொல்கிறாய்!


பாரதியாருக்கா தாசன்? இல்லை, இல்லை,

பாரதி என்றால் கலைமகள் அல்லவா!

பாரதி என்ற பெண்ணுக்கு அல்லவா நீ தாசன்..... '

முடிக்கவில்லை நான்.


துடித்துப்போனான் அவன் : 'அய்யய்யோ, அப்படி

இல்லையடி என் முல்லையே... ' அவனுக்கோ

பதைப்பு எனக்குள்ளோ நகைப்பு!


ஊடலைத்

தொடர்ந்தேன் : 'ஓகோ ஓ, அப்படி இல்லையா?

பின்னே, பார் ரதிக்குத் தாசன் என்று மார்

தட்டுகிறாய் போலும்.' என்றதுதான் தாமதம்.


உடனடியாய் அவன், 'வட்டெழுத்தாய் உள்ளத்தை

வளைக்காதே! நெட்டெழுத்தாய் ஊடலில்

திளைக்காதே... கட்டழகே கன்னித்

தமிழே, பார்! அதி தாசன் உனக்கே தான் என்றான்.


' 'வந்தாயா வழிக்கு' என்று நெஞ்சுக்குள் நான்

மகிழ்ந்தே, நீலப் புடவையால் நிலா முகம்

மறைத்தேனோ இல்லையோ, தென்றலாய்

அவன் கவிதை வந்தென்னைத் தொட்டது :

'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலாவேன்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைக்

கோலம்முழு தும்காட்டி விட்டால் காதற்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ!


வானச்சோலையிலே பூத்த தனிப் பூவோ

நீதான்சொக்கவெள்ளிப் பாற்குடமோ

அமுத ஊற்றோ'
மனத்தை மயக்கும் மாலைப் பொழுதில்

என்னை அவன் சீண்டியதும் உண்டு :

'காலை இளம் பரிதியிலே அவளைக்

கண்டேன்கடற்பரப்பில் ஒளிப்புனலில்

அவளைக் கண்டேன் 'என்று அவன் பாடிவரு

முன்னே,'ஓகோ எவளைக் கண்டாய் ' என்று

அதட்டினேன் பாரேன்,

உடனே,'.............................................................அங்கெல்லாம்

அழகென்பாள் கவிதை தந்தாள் 'என அழகாகப்

பாடி முடித்துவிட்டான். 'போதும் போதும்,

அவளைப் பாடியது போதும் நம்மைப் பாடெ' ன்றேன்.


'வேற்றுமொழிப் பாடத்திலே மயங்கிக் கிடந்தேன்

வீட்டு வாசலுக்கு வந்தென்னை ஆட்கொண்டாய்.

அதனைப் பாடவா' என்று கேட்டான். இம் என்னும்

முன்னே அவன் கவிதை அருவி எனப் பொங்கிப்

பெருகியது :
'கூடத்திலே மனப் பாடத்திலேகூடிக் கிடந்திட்ட ஆணழகைஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்உண்ணத் தலைப்படும் நேரத்திலேபாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில்பட்டுத் தெறித்தது மானின்விழிஆடை திருத்தி நின்றாள் அவன்ஆயிரம் ஏடுகள் திருப்புகின்றான். '
மாலைத் தென்றலாய் மனத்தைக் கவரும் மாணிக்க வரிகள்! ஒவ்வொரு சொல்லும் ஓராயிரம் பொன் பெறுமே! தெறித்தது என்ற சொல் உணர்த்தும் பொருள்... அப்பப்பா! கோலி குண்டு இரண்டு மோதினால் ஒன்றை ஒன்று ஒருகணம் தொட்டு மறுகணம் இரண்டும் இரு திசை நோக்கித் தெறித்துப் போகுமே! அதுபோல, ஆசை எனும் விசையோடு வந்து தாக்கிய வண்டு விழிகள் அவன் விழிகளோடு மோதித் தெறித்தனவாம். ஒன்றினை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிடக் கவ்விய விழிகளைக் கம்பன் காட்டுவான். பட்டுத் தெறிக்கும் விழிகள் வழியே துளிர்க்கும் காதலைத் துல்லியமாகக் காட்டி விடுகிறான், என்னவன். குலையாத ஆடையை அவள் திருத்துகிறாளாம் நூறு பக்கம் கூட வராத நூலில் இவன் ஆயிரம் ஏடுகள் திருப்புகிறானாம்! நிலை குலைந்த நெஞ்சங்கள் உளம் ஒன்றிப் போன அழகிய காதல் காட்சி!
தாபப் பாடல்களில் இவன் தென்றல் காற்று, கோபப் பாடல்களிலே புரட்சி ஊற்று. அவன் காலத்துத் தமிழகத்தின் தலைநகரில் தமிழ்தானில்லை என்ற நிலைதனை மாற்றிடத் துடிக்கிறான். ஊமைகளாய் ஆமைகளாய் உறங்கிக்கிடந்த தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பக் கவிதைக் கனல் வடிக்கிறான், போர்ப்பறை என அவன் ஆர்ப்பரிப்பதைக் கேள் என் தோழி :'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்ததுசிறுத்தையே வெளியே வா..............எலிஎன உன்னை இகழ்ந்தவர் புகழ்ந்திடப்புலிஎனச் செயல்படப் புறப்படு வெளியில்......................................சிங்க இளைஞனே திருப்புமுகம் திறவிழிஇங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? '
நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்து வந்தவர்களை உலுக்கி அவன் எழுப்புவதை உரத்துப் பாடுகிறேன் கேள் :'வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?மொழிப்பற் றெங்கே விழிப்புற் றெழுக! '
அதுமட்டுமா, தமிழர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டுகிறான் பார் :'தமிழின் நலங்கெடல் எங்கெல்லாம் அங்கெல்லாம்தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் எனக் கொதித்துப் பாடினார் பாரதியார். இவனோ, தமிழ் மாந்தர் நிலைகெட வைத்தவர்களைப் பூண்டோடு வேரறுத்தல் வேண்டும். அதனால்,'கொலை வாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே'எனக் குதித்துச் சாடுகின்றான்.
புரட்சிக் கவி என்ற நூலை எழுதிய காரணத்தால் மட்டுமே இவன் புரட்சிக் கவிஞன் ஆகிவிடவில்லை! இக்காலத்தில் மிகவும் பழகிப்போன கருத்துக்கள் இவன் காலத்தில்- அரை நூற்றாண்டுக்கு முன்னால் - இவன் கவிதையில் பூத்த புரட்சிப் பூக்கள்! கருத்தடையும் கருச்சிதைவும் தெருவெங்கும் மலிவாகிப் போனது இக்காலம். ஆனால் அன்றோ அதனைப் பற்றி எண்ணவும் நாணினர் பேசவும் கூசினர். 'மக்கள் தொகைப் பெருக்கம் இறைவன் தந்த வரம், அதனைக் குறைக்க முயல்வது பாவம்... 'என நம்பிய ஆட்டு மந்தைக் கூட்டத்திலே அரிமாவாய் இவன் குரல் ஒலிப்பதைக் கேள் :'காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?சாதலுக்கோ பிள்ளை தவிப்பதற்கோ? 'கருத்தடைக்கு வழிகாணச் சொல்கிறானே தவிரக் கருகலைப்புக்கு வழிவகுக்கச் சொல்லவில்லை என்பதைக் கவனி;.
மேலும் தொடரட்டுமா என் தோழி :
*****************************************************************'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டுமண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே'எனப் பெண்ணுரிமைக்குக் குரல் தரும் இவன் இளம் விதவைகளின் நிலை கண்டு பரிதவிக்கிறான். 'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் 'எனக் கவிதை பாடலாம் ஆனால் இணைவிழைச்சால் வாடும் நெஞ்சுக்குக் கவிதைப் போர்வை மட்டும் போதுமா? விதவை என்று சொல்லி வெறுங் கதவை மூடுவதால் உணர்ச்சி அலைகள் ஓயுமா? இயல்பான பருவப் பசி மாயுமா? பதினாறு வயதில் அறுதலியாய் வாழவேண்டும் என்றால் முடியுமா? இயற்கைதான் விடுமா? விதவைக் கோலம் காலத்தின் கட்டாயமாக்கப்பட்ட ச+ழலில் இவன் தனிக்குரல் கவிதை நயத்தோடு வினா எழுப்புகிறது :'பாடாத தேனீக்கள் பசியாத நல்வயிறு பார்த்தது உண்டோ? '
வாழ்வு பெற இயலாமல் துடிக்கும் விதவைகளின் தாழ்வு கண்டு பொருமுகிறான் 'கோரிக்கை அற்றுக் கிடக்கு தண்ணே- இங்குவேரிற் பழுத்த பலா'என்று.
இந்த வேர்ப் பலாக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க என்ன தடை? 'மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? 'இவன் எழுப்பும் சிந்தனைக் கேள்வி!
கூட்டுறவே நாட்டுயர்வு என்று கொடிபிடித்துக்'கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால்மூடிக் கிடக்கும் தொழிற்சாலை முக்கோடி'எனப் பாடிய இவன் கவிதைகளில் வெடித்துச் சிதறும் புரட்சிக் கருத்துக்கள் பலப்பல. இப்போது பரியுமடி உனக்கு இவன் எப்படி புரட்சிக்கவி ஆனான் என்று.
புரட்சிப் ப+க்கள் மலரும் இவன் மனத்தில் விரிந்த கனவுகள் எத்தனை, எத்தனை தெரியுமா? தமிழன் தரணி ஆளவேண்டும் என்பதே இவனின் தணியாத ஆசை. அதுவும் சாதாரணமாக அல்லவாம் பின்னே? தமிழன்'ஆட்டும் சுட்டுவிரல் கண்டேஆடிற்று வையம் என்றுகேட்டின்பக் கேணியில்குளிக்கும்நாள் எந்நாளோ?' என ஏங்கியது இவன் தமிழ் உள்ளம்.
காதற் சுவையை அள்ளி வழங்கியவன், புரட்சிக் கனலாய் முழங்கியவன் ஆங்காங்கே நகைச்சுவையையும் இழைத்திருக்கிறான். ஒன்றே ஒன்று கூறுகி;றேன்: அப்போது இருந்த அமைச்சர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். நாட்டவரை ஆதரிப்பீர் என்று அமைச்சர் ஒருவரிடம் கூறினானாம். சாப்பாட்டு ராமனான அவரோ, 'ஆமாம், ஆமாம், நாட்டு அவரை கூட்டுக்கும் நன்று குழம்புக்கும் நன்று!' என்று சொன்னாராம். அதனைக் கேட்டுக் கோபத்தோடு 'மாட்டுக்கா வாய்க்கும் தமிழ்?' எனச் சிரித்தான் நானும் நகைத்தேன்.
உள்ளுர்த் தமிழருக்கும் உலகளாவிய தமிழருக்கும் அவன் முழக்கிய சங்கநாதம் இன்றும் ஒலிக்கிறதே :'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழ்என்று சங்கே முழங்குஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே'இதன்படி நடந்தால், தமிழர்கள் தரணி ஆளத் தடை ஏதடி தோழி!
என்னவனைப் பற்றி இன்னும் எழுதலாம், திருக்குறளுக்குப் புரட்சி உரை படைத்தவன் கவிதைக் கலை வளரக் குயில் தாளிகை நடத்தியவன்,; நான் சொன்னபடி கேட்பான்,'தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை'என்று சின்ன குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனடி தோழி! என்னவனைப் பற்றிச் சொன்னது கொஞ்சம் என்ன இருந்தாலும் வானத்தைப் பிடித்து நாலு சுவர்களுக்குள் அடைத்துவிட முடியுமா, சொல் தோழி!
மற்றவை மறுமடலில்!


இவண்,
உன்னுயிர்த் தோழி,


செந்தமிழ்ச் செல்வி.

Wednesday, April 16, 2008

<>தமிழர் புத்தாண்டு<>

பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ
பிரான்சு.

புத்தாண்டில் புத்துலகைப் படைக்கப்
புறப்படும் தமிழினமே, நில்!

உன் புத்தாண்டு,
தமிழ்ப் புத்தாண்டு எங்கே தொடங்குகிறது
என அறிவாயா நீ, சொல்!

சித்திரை மாதத்தில் புத்தாண்டு என்றிருந்த
நிலை மாற்றிய தமிழ்ப் பேரறிஞர்கள்
பெயராவது தெரியுமா உனக்கு?

அறியாமை தவறில்லை,
அறிந்துகொள்ள விரும்பாமையே பெருந்தவறு!
உண்ணல் உறங்கல் பெண்டிரை நண்ணல் என்ற
உருப்படா வட்டத்துள் உலா வரும் தமிழினமே,
கன்னல் மொழி தமிழுக்கெனத்
தனிப் புத்தாண்டைத் தம் ஆராய்ச்சித்
திறத்தாலே உருவாக்கித் தந்தவர் மறைமலை அடிகளார்!

தனித் தமிழின் தந்தை இவர்!
அன்றிருந்த தமிழகத்தில்,
வடமொழி கலவாமல் நடை போட முடியாது
தமிழ் என்று தவறாகக் கருதி இருந்த நிலையை
உறுதியாக நின்று மாற்றியவர்.

தனித்தமிழ்க் கொடியை ஏற்றியவர். வட மொழியோ
பிற மொழியோ ஏதும் கலவாமலேயே வடிவாகத்
தனித்தமிழ் எழுதிட முடியும் என எண்பித்தவர்.

'வேதாச்சலம்' என்ற தன் வடமொழிப் பெயரை,
'மறைமலை' என மாற்றிக்கொண்டவர்.
இல்லறத்திலிருந்து ஒதுங்கித் துறவறம் பூண்டதால்
'அடிகள்' என்ற பின்னடை சேர 'மறைமலை அடிகள்' ஆனவர்.

வடமொழி படித்தவர், ஆங்கிலப் புலமை மிக்கவர்,
தமிழ் அறிஞர்!
'மணிவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்',
'முல்லைப் பாட்டு - மூலம்,
ஆராய்ச்சி உரை' போன்ற ஆய்வு நூல்களின்
ஆசிரியர். ஆராய்ச்சிப் பேரறிஞர்.

திருவள்ளுவர் காலம் பற்றிப் பெருமளவு ஆராய்ச்சி
மேற்கொண்டு ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வு
செய்த பின், கிறித்துவுக்கு 30 ஆண்டுகட்கு முன்னர்
வள்ளுவர் பிறந்திருக்க வேண்டும் என்ற
முடிவுக்கு இவர் வந்தார்.

சென்னையில் திருவள்ளுவர் கழகம் 18 /01/ 1935 ல்
வள்ளுவருக்கு விழா எடுத்தது. இவ்விழாவில் தமிழ்த்
தென்றல் திருவாரூர் வி; கலியாண சுந்தரனார்
(திரு. திரு.வி. க), முத்தமிழ்க் காவலர்
திரு.கி.ஆ.பெ. விசுவநாதன் (திரு கி.ஆ.பெ)...
போன்ற தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய மறைமலை
அடிகளார்,
"கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்ப
திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து
கண்ட முடிவாகும்" என அறிவித்துத் திருவள்ளுவர்
ஆண்டைத் தொடங்கி வைத்தார். கிறித்து ஆண்டுடன்
31 அண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக்
கணக்கிட வேண்டும் என்பது அடிகள் குறிப்பு.

இதனை அறிஞர்கள் அவை ஏற்றக்கொண்டது.
அன்று தொட்டு அவ்வாண்டு நடைமுறைப்
படலாயிற்று. (காண்க : 'திருக்குறள் வாழ்வியல்
உரை' - மதுரை இளங்குமரனார். வர்;த்தமானன்
பதிப்பகம்.)

'1969 -இல் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு
ஆட்சிப் பொறுப்பு ஏற்றபின், பொங்கலுக்கு அடுத்த
நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டு அரசு
விடுமுறை அளிப்பது என்றும் 01 /01/ 1970 முதல்
அது நடைமுறைக்கு வரும் என்றும் ஆணை இட்டார்.

திருவள்ளுவர் ஆண்டு முறையைத் தமிழ் நாடு
அரசு ஏற்று 1971 முதல் அரசு நாட் குறிப்பிலும்,
1972 முதல் குறிப்பாக அரசிதழிலும், 1981 முதல்
அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி
வருகிறது.

தைத் திங்கள் 2 ஆம் நாளைத் திருவள்ளுவர் நாள்
என்று அரசு 1974 முதல் கொண்டாடி வருகிறது.
' (காண்க : திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் 117).
இதுதான் திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பு, வளர்ப்பு,
வரலாறு.திருவள்ளுவர் ஆண்டின் வரலாற்றை
அறிந்துகொண்டதோடு நிற்காமல் தமிழர்களாகிய
நாம், தமிழ் உணர்வோடு; அந்த ஆண்டு முறையைப்
பின்பற்ற வேண்டாவா?

கிறித்து ஆண்டோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக்
கொள்ளுங்கள் - திருவள்ளுவர் ஆண்டு கிடைத்துவிடும்.
எடுத்துக் காட்டாக, இந்த ஆண்டைக் கிறித்து ஆண்டு
முறைப்படி 2005 என எழுதுகிறோம். இத்தோடு 31 -ஐக்
கூடடினால் 2036 வருகிறது அல்லவா!

அவ்வளவுதான். இதுதான் திருவள்ளுவர் ஆண்டு.
மறைமலை அடிகள் காட்டிய தனித்தமிழ் உணர்வு
நம்மிடையே மலர வேண்டும், அடிகளார் ஊட்டிய
அந்த உணர்வு இன்னும் வளரவேண்டும்.

"தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழைப்
பயில வேண்டியது அவர்களது இன்றியமையாத கடமை.
தமிழர், தம் தாய் மொழியை ஆங்கிலம் முதலிய
மொழிகளைவிட முதன்மையாகக் கருத வேண்டும்!"
சொல்பவர் யார் தெரியுமா?

காந்தி அடிகளேதான்! (காண்க : 'காந்தி அடிகள்
வலியுறுத்திய தமிழ் உணர்வு' லேனா தமிழ்வாணன்,
குமுதம் 24.05.2004). அன்று அண்ணல் காந்தி சொன்ன
அறிவுரை இன்றும் நமக்குப் பொருந்துகிறதே!
பல நிலைகளில் தமிழைக் கோட்டை விட்டிருக்கிறோம்.

பாருங்களேன், 60 ஆண்டுச் சுழற்சியில் நாம் புழங்கி
வந்த, பிரபவ என்று தொடங்கி அட்சய என நிறைவு
பெறும் ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள். ஒரு
பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லையே!

அத்தனையும் வடமொழிப் பெயர்களின் தமிழ்
வடிவங்கள். ஆங்கிலேயனை விரட்டிய பிறகும்
ஆங்கிலத்தைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருக்கிறோம். வடமொழிக்கு விடைகொடுத்து
அனுப்பிய பிறகும் புரியாத இந்த வடமொழிப்
பெயர்கள் நமக்கு எதற்கு? இனிய தமிழ்க் கனிகள்
இருக்க கனியாத காய்கள் மேல் இன்னும்
ஏன் உவப்பு?

திருவள்ளுவர் ஆண்டைப் பயன் படுத்தினால்
இந்த வடமொழிச் சிக்கல் எழாது, தமிழனின் தனிப்
பெரும் தன்மானமும் விழாது!

ஆகவே, திருவள்ளுவர் ஆண்டு முறையைப்
பயன்படுத்துவோம், எங்கும் எதிலும் எப்போதும்!
சரி சரி, வடமொழிப் பெயர்களைத் தாங்கிய
60 ஆண்டுச் சுழற்சியை ஓரங்கட்டி விட்டோம்.
இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை -
தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா?

தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும்
தனித்தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவை எவை என
அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன்
வகுத்துத் தந்த கால அட்டவணை (calendrier / calendar)
வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை
அடிப்படையாகக் கொண்டது. இந்த வான
மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப்
பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர்
கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும்
விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப்
பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள்
இடப்பெற்றுள்ளன. இப்படிப் பெயர் கொடுத்தவர்கள்
கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய
சொல் என்ன தெரியுமா? 'horos'. இன்று ஐரோப்பிய
மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு,
'horoscope, horodateur, hour, heure, year...' இச்சொல்லே
வேர்ச் சொல். இந்த 'horos' என்ற கிரேக்கச்
சொல்லுக்கு 'boundary, limit, border' என்று பொருள்.
(காண்க : On line etymology dictionary & The American
Heritage dictionary).
இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப்
போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும்.
பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற
சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல்
ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி -
நா. கதிரைவேற்பிள்ளளை) இந்த ஓரை என்ற
சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'horos'. வானப்
பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச்
செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று
அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி '
என்று பெயர்.

கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச்
சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும்
தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள்
கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர்.
இவற்றின் பிரஞ்சு, ஆங்கில, கிரேக்க, தமிழ்ப் பெயர்
களையும் அவற்றுக்கு உரிய (தற்காலத்தில் உலகம்
நெடுக வழங்கும்) குறியீடுகளையும் எதிர் வரும்
பட்டியலில் காண்க.

ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின்
பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய்
இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்
முறையைப் பின் பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய
நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல்
சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப்
பயன்படுத்துதல் வேண்டும்.

முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின்
பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள்
பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான்
இம்முறையைக் கடைப்பிடித்தனர். கிழமை என்ற சொல்லுக்கு
'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய
நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம்.

புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே,
அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச்
சொற்களைப் பயன்படுத்துதல் நன்று.ஆக, தமிழர்களின்
புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள்
(சனவரி 14) தொடங்குகிறது என்பதை நினைவில்
கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை
அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய
நம் கடமை.

எனவே, இனி ஒரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம் :"திருவள்ளவர் ஆண்டே இனி நம் ஆண்டு!
சுறவத் திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின்
முதல் நாள்.சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள திங்கள்
களின் தனித்தமிழ்ப் பெயர்களையே நாமினி
பயன்படுத்துவோம்.

கிழமைகளின் பெயர்களையும் தனித்தமிழிலேயே
எழுதுவோம் ..." என்ற உறுதிமொழியை இன்று எடுப்போம்!
வடமொழியோ பிறமொழியோ விட்டொழிப்போம்!

நம் அருமைத் தமிழ் மொழியாலே நாம் செழிப்போம்!

வாழ்க திருவள்ளுவர் ஆண்டு,
வளர்க நம் தனித்தமிழ்ப் பற்று!

12ஓரைகள் ( இராசிகள்)Période Français English Greekmars 21 - avril 20 Bélier Ram Ariesavril 21 - mai 21 Taureau Bull Taurusmai 22 - juin 21 Gémeaux Twins Geminijuin 22 - juillet2 Cancer Crab Cancerjuillet 23 - août 22 Lion Lion Leoaoût 23 - septembre 23 Vierge Virgin Virgoseptembre 24-octobre 23 Balance Balance Libraoctobre 24- novembre 22 Scorpion Scorpion Scorpionovembre 23-décembre 21 Sagitaire Archer Sagitariusdécembre 21-janvier 20 Capricorne Goat Capricornjanvier 21-février 19 Verseau Waterbearer Aquariusfévrier 19 - mars 20 Poissons Fish Pisces

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

வழக்குத் தமிழ் <> தனித்தமிழ்

தை <> சுறவம்

மாசி <> கும்பம்

பங்குனி <> மீனம்

சித்திரை <> மேழம்

வைகாசி <> விடை

ஆனி <> இரட்டை

ஆடி <> கடகம்

ஆவணி <> மடங்கல்

ஐப்பசி <> துலை

மார்கழி <> சிலை

புரட்டாசி <> கன்னி

கார்த்திகை <> நளி

*********************************
வழக்குத் தமிழ் <> தனித்தமிழ்

ஞாயிறு <> ஞாயிறு

திங்கள் <> திங்கள்

செவ்வாய் <> செவ்வாய்

புதன் <> அறிவன்

வியாழன் <> வியாழன்

வெள்ளி <> வெள்ளி

சனி <> காரி

முடிவு

(திருவள்ளுவர் ஆண்டு 2036 சுறவம் 03 ஆம் நாள் (16. 01. 2005) அன்று பாரிசில் ஐரோப்பிய தமிழ்ச் சங்கம், நடத்திய தமிழர் விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் ஆற்றிய சிறப்புரை)