Monday, July 7, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(5)




சென்ற முறை,
வியட்நாம் வீடு
என்ற படத்தில்



வரும் 'பாலக்காட்டு பக்கத்திலே
ஒரு அப்பாவி ராஜா...'

என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தேன்.
அதில் வரும் 4வரிகளையும் சொல்லி அவை கம்பன்
பாடலின் அடியொற்றி எழுதப்பட்டவை, கம்பனின்
அவ்வரிகளை யாரேனும் சுட்டிக்காட்ட முன்
வாருங்கள் என அழைப்பும் விடுத்திருந்தேன்.
இது வரை எவரும் அதற்கு விடை தரவில்லை.

அதனால் பாதகம்இல்லை, தவறும் இல்லை!
ஏனெனில், கம்பனை ஆழமாகப் படித்தவர்களும்
அறியாத,அறிந்தும் பொருட்படுத்தாத பாடல் இது!.
இனி நம் தொடரைத் தொடர்வோம்.

"சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்"எனப்
பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல்
சிற்றிலக்கியங்கள் ஈறாகத்தமிழ் இலக்கியங்களை
ஊன்றிப் படித்திருக்கவேண்டும். தம் திரைப்படப்
பாடல்களில் இவர் இவற்றை இழைத்திருக்கும்
பாங்குகளைப் பலரும் இணையதளத்தில்பதிவு
செய்திருக்கின்றனர்.(காண்க : நிலாச்சாரலில்

கண்ணதாசன் பற்றிய சக்திதாசன் கட்டுரைகள்,
திண்ணையில் அப்துல் கையூம் கட்டுரை, -

நிலா முற்றத்தில். சத்தியாவின்கட்டுரை...).எனவே,
திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே.

எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது!
அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு
உண்டு.
கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு
இல்லை அவர். கம்பனில்கருத்தூன்றிப் படித்திருக்க
வேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில்
படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா?

பார்த்து ரசித்திருப்பாரா?இல்லை அதனைத் தன்
பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான்
செய்திருப்பாரா?
அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன்
வரிகளைவைக்கிறேன் உங்கள்
பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் - ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

கம்பனின் காவிய வரிகள் இதோ :
"பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து
இருந்த பெண்ணை ஆகத்தில் ஒருவன் வைத்தான்
அந்தணன் நாவில் வைத்தான்மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளைமாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்த்தி!"

சூர்ப்பணகை - மூக்கறுபட்டவள்ஆர்ப்பரித்து அழுத
வண்ணம்அண்ணன் இராவணனிடம் ஓடோடி
வருகிறாள். தன்அவல நிலைக்குக் காரணத்தைத்
தருகிறாள்.அதே சமயம், சீதையின் அழகை எல்லாம்
சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள்அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள்.
அப்போதே அவர் அவரவரை அவரவர் இடத்தில் வைக்க
வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.'பரமசிவன்
பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான்.
தாமரை மலரில் இருந்த திருமகளைத்தன் மார்பிலே வைத்திருக்கிறான். பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்.

தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன்தன் நாவிலேயே வைத்திருக்கிறான்.மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை
இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயேவைத்து வாழ்கிறார்கள்.மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க்கீர்த்தி பெற்ற அண்ணனேமின்னலை விட நுண்ணிய இடை கொண்ட
செம்பொன் சிலையாம் சீதையைஅடையும் போது
அவளைஎங்கே வைத்து வாழ்வாய் நீ!'எனச்
சூர்ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.
ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்
பெறுகிறது.கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு
'எங்கனம் வைத்து வாழ்தி!' என்ற வரியில்
கீழறைப்பொருளை வைக்கிறான் :மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம்உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் !
இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை
எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்?வாழமாட்டான்!

இறுதியில் வீழ்வான் என்றபொருள் இவ்வரியில்
பொதிந்துள்ளது.கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள்
கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து
தோய்ந்தவர்கள்பார்வையிலும் படாத பாடல் இது!
ரசிகமணி டி.கே.சியோ,திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோபேராசிரியர் அ. ச. ஞானசபந்தமோ
கூட எங்கேயும் எடுத்துக் காட்டாத கவிதை இது!

எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ!
எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ!

அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார்
கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக்காட்சிக்கு ஏற்பச்
சொற்களை அமைத்து' ராஜாபத்மநாபன் ராணியைத்
தன் நெஞ்சில் வைத்தான்."
என்றுமுத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!
கம்பனின் வைரமணி வரிகள் பலகவிஞர் கண்ணதாசனின்
நெஞ்சைக் கவர்ந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றிக் கவிஞரே

'நான் ரசித்த வர்ணனைகள்" என்றதம் நூலில் குறிப்பிடுகிறார்.
அவர் ரசித்த அந்தப் பாடல் -பலரும் ரசித்த பாடல்!கம்பனின்
தலைசிறந்த பாடல் வரிசையில் இடம் பெற்ற பாடல்.

எந்த அளவுக்கு இந்தப் பாடல் கவிஞரின் நெஞ்சைக் கவர்ந்தது என்றால்,அப்பாடல் வரி ஒன்றைஅப்படியே தன் பாடலில் பதிந்து வைத்துவிட்டார் கவிஞர்.

அந்த வரியைப் பார்க்குமுன் கம்பனின் கவிதை
வரிகளைக் கண்டுபடித்து ரசித்து வருவோம் , கண்ணதாசன்
ரசித்ததைப் போல.என்னையே நோக்கி யான் இந்
நெடும்பகை கொண்டது எனத்தன்னையே தருக்கி நின்ற
இராவணன்,'வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த
தோளும்நாரத முனிவற்கு நயம்பட உரைத்த நாவும்தாரணி
மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்வீரமும் களத்தே
போட்டு வெறுங் கையொடு மீண்டு''சானகி நகுவள் என்றே
நாணத்தால் சாம்பிய' இராவணன் மண்ணின் மீது மாண்டு
கிடக்கிறான் - மனைவிமண்டோதரி ஓடோடி வந்து
அவனைக்கண்டு புலம்பி அழுகிறாள்.

பெற்ற மகன் இந்திரசித்துவின் தலைஅற்ற உடலைக்
கண்டழுது ஒப்பாரி வைக்கும் போதுகொற்றவன்
இராவணனுக்கும் நாளை இந்தக் கதிதானே என
ஒப்பிலாத் தன் கணவனை நினைத்து அப்போதே
ஒப்பாரி வைத்து அழுதவள் அவள்.அதனைக் கம்பன்"
அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்ற அமுதால்
செய்தநஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை
இத்தகையன் அன்றோ!" எனஅவள் அரற்றுவதாகப்
பாடுவான்.

மகன் மரணத்திலேயே மணாளனின் மரணத்தைக்கண்டு
உருகிப் பாடிய மண்டோதரிகணவனின் உடலைப்
பார்க்கிறாள்கண்ணீரும் கம்பலையுமாகத் தன் உள்ளத்து
உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்தத்
திருமேனிஎள்ளிருக்க இடமின்றி உயிரிருக்கும்
இடம் நாடி கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
னச் சிறையில் கரந்த காதல் ; உள்ளிருக்கும் எனக்
கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!

இராம பாணம் இராவணன் உடலைச்சல்லடைக் கண்களாய் துளைத்திருக்கிறதாம்!(இக்காலத்து AK 47 துப்பாக்கி போல).
ஏன்? ஏன்? ஏன்?காரணத்தைத் தேடும் மண்டோதரியன்
மனம்பெண்மைக்கே உரிய (feminine logic)தோரணையோடு பேசுகிறது :அமுதால் செய்த நஞ்சாம் சீதை மேல் வைத்த
முறையற்ற அறமற்ற காதல் எங்கே இருக்கிறதுஎனத்
தேடிக் கண்டுபிடித்து அதனை வேரோடுகல்லி எறியவே
இராவணன் உடலைப் பாணம்சல்லியாகத்
துளைத்துவிட்டிருக்கிறது.

துளைக்கப் பட்ட உடல் எப்படிப் பட்ட உடல்?
இளைத்துப் போன உடலா அது? றைவன் இருக்கும் இமயத்தையேபெயர்த்தெடுக்க முயன்ற உடல் அல்லவா!
அதனாலேயே சாதாரண அவன் மேனிதிருமேனி
ஆன உடல் அல்லவா?
(திருமேனி என உடலை அழைப்பது வைணவ மரபு,
இராவணன் சிவபக்தன், ஆகவே அவன்உடலைத்
திருமேனி என வைணவ மரபுப்படி அழைப்பது
தவறாகும். ஆனால் கம்பன்அப்படித்தான் அழைக்கிறான்
மண்டோதரி வாயிலாக!
கைலாய மலையை அவன் தீண்டியகாரணத்தால்
அவன் மேனி திருமேனி ஆனது என்ற கருத்துப்படத்தான்
கம்பன்அப்படிக் கூறி இருக்கிறான்).சிவனைக்
குறிப்பிட எத்தனையோ வர்ணனைகள் குறியீடுகள்
உண்டு.
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு
' வெள்ளெருக்கஞ் சடைமுடியான்" எனக் கம்பன்
குறிப்பிடுகிறானே, ஏன்?
யாருமே விரும்பாதவற்றைத் தான் விரும்பி
ஏற்பவன்சிவன் - அமுதைப் பிறர்க்கு அளித்துவிட்டு நஞ்சைத் தானருந்தியதிருநீலகண்டன் அல்லவா அவன்.
பட்டையும் பீதாமபரத்தையும் பிறர்க்குத்தந்துவிட்டுத்
தான் மட்டும் மான் தோலையும் யானைத்
தோலையும்புலித்தோலையும் உடுத்துகின்றவன்
தானே அவன். அது போலவே, வண்ண மலர்களை,
வாசப் பூக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு
யாரும் சூட விரும்பாஎருக்கம் பூவைத் தான்
சூடிக்கொண்டவன். இப் பூவில் கண்ணைக்
கவரும் வண்ணமோகருத்தைக் கவரும்
கள்ளோ (தேன்) இல்லை! பிறரைக் கவரும்
ஆற்றலும் இந்தப்பூச்சூடிய சடைக்கும் இல்லை!
அதனால்தான் போலும் இராவணன் அங்கே
தன் வீரத்தைவலிமையைக் காட்டி மேரு மலையைத்
தோளில் எடுக்க முனைந்தான். இப்போதுஇவற்றுக்கு
நேர் மாறான முரண்தொடையை அமைக்கிறான் கம்பன்.
கள்ளோடு கூடியஅழகிய வண்ண மலர்களைச்
சீதையின் கூந்தலுக்குச் சூட்டுகிறான்,
"கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்' என்று. மயக்கம் தருவது
கள். அந்தக் கள்உள்ள மலர்களைச் சூடிய சீதை மீது
மாளாத மயக்கம் கொண்டான் இராவணன்.
அழகுதருவது கூந்தல்.
அதனால் அழகெனும் அழகுமோர் அழகு பெற்ற
சீதை மேல், கள்ளொடுகூடிய பூச்சூடிய கூந்தலை
உடைய சானகி மீது அடங்காக் காதல் கொண்டான்
இராவணன். இவ்வளவு கருத்தழகுகளைப்
பொதிந்துள்ள இந்தக் கவிதை கண்ணதாசன்
மனத்தைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பிலலை.
அதிலும் ' கள்ளிருக்கும்மலர்க் கூந்தல் சானகி' என்ற
வரி கண்ணதாசனைப் பெரிதும் ஈர்த்துவிட்டது.
பல திரைப் பாடல்களில்;, கம்பன் கருத்தை உள்
வாங்கித் தன் வயமாக்கி தன்சொற்களில் வழங்கிய
கண்ணதாசன் இந்த வரியை மட்டும் அப்படியே தன்
பாடலில்பொதிந்து வைத்துவிடுகிறார், தங்க
அணிகலனில் வைரமணியைப் பதிப்பது போல :
"கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்கள்ளிருக்கும்
மலர்க் கூந்தல் சானகி".எந்தப் படத்தில், என்ன இடத்தில்
இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல்என்ன...
பாடியவர் யார்... போன்ற விவரங்களை அறிந்தோர்
கூறினால் பெரிதும்மகிழ்வேன்.
இனி,கம்பன் சொற்களையும் கருத்துகளையும்
கலந்து கண்ணதாசன் எழுதிய பாடல்ஒன்றைக்
காண்போமா...

No comments: